மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா
27 Sep,2019
விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பாக பேசி ஏற்கனவே சிக்கலில் மாட்டிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்னொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற நடவடிக்கை மீது அழுத்தம் பிரயோகித்தது தொடர்பாக புதிய சர்ச்சை தற்போதைய தேர்தல் காலத்தில் எழுந்து உள்ளது.
நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜை ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் வழக்கு நடவடிக்கையை இல்லாமல் செய்வதற்கு இவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளார் என்று ஆதாரங்களுடன் சுட்டி காட்டப்படுகின்றது
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு மகளிர் இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா இராஜாங்க அமைச்சின் கடித தலைப்பை பயன்படுத்தி சிபரிசு கடிதம் எழுதி நோர்வே பிரஜைக்கு எதிரான வழக்கை செல்வாக்கு மூலமாக முடிவுறுத்தி தர வேண்டும் என்று கோரி இருக்கின்றார்.
இந்த நோர்வே பிரஜையை மிக நன்றாக அறிவார் என்றும் கடந்த பொது தேர்தலின்போது இவரின் வெற்றிக்காக இந்த நோர்வே பிரஜை பெரிதும் பாடுபட்டு இருந்தார் என்றும் இக்கடிதத்தில் எடுத்து கூறியுள்ளார்.
இவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி சட்டமா அதிபர், பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை மேற்கொள்கின்ற முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்று தெரிய வந்துள்ளது