பிரிட்டனிலிருந்து சென்ற இலங்கைத்தமிழரை சுட்டுக் கொன்ற மலேசிய பொலிஸ்!
27 Sep,2019
விடுமுறையைக் கழிக்க பிரிட்டனிலிருந்து மலேசியாவுக்கு குடும்பத்துடன் சென்ற இலங்கைத்தமிழரை மலேசிய பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். அத்துடன் அவரது மனைவி காணாமல் போயுள்ளதுடன் பிள்ளைகள் அநாதரவாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மனைவி மோகனாம்பாள் கோவிந்தசாமி மற்றும் 5, 10, 17 வயதுகளில் இருக்கும் மூன்று பிள்ளைகள் ஆகியோருடன் மலேசியாவுக்குச் சென்ற இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் செப்ரெம்பர் 14ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் அவரது பிள்ளைகளும் குடும்பத்தாரும் மலேசிய பொலிசாரிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
பிரிட்டனில் வசித்துவந்த 40 வயது விஜயரத்தினம், அவரது மைத்துனர், மற்றொரு மலேசிய ஆடவர் ஆகியோர் சென்றுகொண்டிருந்த காரை சிலாங்கூர் மாவட்டத்தின் பண்டார் கவுன்டி ஹோம்ஸுக்கு அருகில் நிறுத்தச் சொல்லி பொலிசார் ஆணையிட்டும் அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்த காரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு பொலிசார் துரத்திச் சென்றதாகவும், விஜயரத்தினம் சென்றுகொண்டிருந்த காரிலிருந்து பொலிசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
தற்காப்புக்காக பொலிசார் சுட்டதில் ஆண்கள் மூவரும் இறந்துபோனதாகவும் செய்தியாளர்களிடம் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால், பொலிசார் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விஜயரத்தினத்தின் குடும்பத்தார் சந்தேகத்தைக் கிளப்பியதையடுத்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
விஜயரத்தினத்துடன் காரில் சென்ற இரு ஆண்களான தவச்செல்வன் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திர சேகரன் ஆகிய இருவரும் ‘08’ எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர்கள் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விஜயரத்தினம் மலேசியாவில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக நாட்கள் தங்கிவிட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொலிசாரின் வாதத்தை வலுவாக மறுத்துள்ளது விஜயரத்தினத்தின் குடும்பம்.
அவர்களைப் பிரதிநிதித்து வாதிடும் வழக்கறிஞர் பொன்னுசாமி உதயகுமார்,
“இறந்துபோன ஆண்கள் மூவரது நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருக்கிறது. ஒருவருக்கு தலையிலும் குண்டு பாய்ந்துள்ளது. அதனைப் பார்த்தால் திட்டமிட்டு சுட்டுக் கொன்றது போலுள்ளது, தற்காப்புக்காகச் சுட்டது போலில்லை,” என்று தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“அதிகாலை வேளையில் ஒதுக்குப்புறத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை. பொலிசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொலிஸ் வாகனத்தில் துப்பாக்கிக் குண்டு ஏதும் பாயவில்லை,” என தமது சந்தேகத்துக்கான காரணங்களை பொன்னுசாமி விளக்கினார்.
மேலும் விஜயரத்தினத்தின் குடும்பத்தார் யாரும் இதுவரை பார்த்திராத சிவப்பு வோல்க்ஸ்வேகன் போலோ காரில் அந்த மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக அவரது குடும்ப நண்பரான சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
அந்த காரில் இருந்த நான்காவது நபரின் காலில் குண்டடி பட்டதாகவும் ஆனால் அந்த நபர் காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடிவிட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 15) காலை சொன்னதாக விஜயரத்தினத்தின் குடும்பத்தார் கூறியுள்ளனர். ஆனால், காரில் நான்காவது நபர் இருந்ததை பொலிசார் மறுத்துள்ளனர்.
அந்த நான்காவது நபர் விஜயரத்தினத்தின் மனைவியும் மலேசியருமான மோகனாம்பாளாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர்.
கணவர் மற்றும் சகோதரருடன் இரவு உணவு அருந்துவதற்காக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) இரவு வெளியில் சென்ற மோகனாம்பாள் அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை, ஆடவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து மலேசியாவில் விடுமுறைக்காகத் தங்கியிருந்த விஜயரத்தினத்தின் குடும்பத்தார் போர்ட்ஸ்மவுத்தில் வசித்து வந்தனர். அவர்களது இளைய பிள்ளை பிரிட்டிஷ் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்.
விஜயரத்தினம் பிரிட்டனில் வசிக்கவில்லை என்றும் அவர் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான ஆவணம் ஏதும் இல்லை என்றும் மலேசிய பொலிசார் குறிப்பிட்டாலும் அந்தக் குடும்பம் லண்டனிலிருந்து கோலாலம்பூர் சென்று திரும்புவதற்கான விமானச் சீட்டுகளின் ரசீதைப் பார்த்ததாக கார்டியன் குறிப்பிட்டது.
அந்தக் குடும்பம் போர்ட்ஸ்மவுத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாக அவர்களது குடும்ப நண்பர் ஒருவரும் உறுதிசெய்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கின் தொடர்பில் சிலாங்கூர் பொலிஸ் தலைமையகத்துடன் பேச எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக தி கார்டியன் தெரிவித்தது.
ஆனால், இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்போவதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விஜயரத்தினத்தின் பிள்ளைகள் தங்களது தாத்தா, பாட்டியுடன் பிரிட்டனுக்குத் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை கோலாலம்பூரில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் செய்து வருவதாக வழக்கறிஞர் பொன்னுசாமி கூறினார்.