ஞானசார தேரர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் – கோடீஸ்வரன்
25 Sep,2019
முல்லைத்தீவில் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிறைவாசம் அனுபவித்த ஞானசார தேரர் திருந்தி நடப்பார் என ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தார்.
ஆனால் அவர் நன்னடத்தையை சரியான முறையில் பயன்படுத்தாமல் நீதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனநல்லிணக்கத்தை குழப்பும் வகையிலும் செயற்பட்டு வருகின்றது மிகவும் பாரதூரமான விடயமாக இருக்கின்றது.
இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்பட்டு வரும் என்றால் இவரை விசாரணை செய்து கைதுசெய்ய வேண்டும். இந் நாட்டில் நீதி என்பது யாவரிக்கும் சமத்துவம் ஆனது.
ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர் வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் இந்நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் நீதியை மறுக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது.
மனிதாபிமான ரீதியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என செயற்பட்ட போது பாலித்த தேவப்பெரும நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழே கைது செய்யப்பட்டார்.
இந்த நாட்டில் தேவப்பெருமவிற்கு ஒரு நீதி, ஞானசார தேரருக்கு ஒரு நீதி வழங்கப்பட முடியாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் ஒரு நீதி என்கின்ற எண்ணக்கருவிற்கு அமைய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.