நீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி
23 Sep,2019
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து, பௌத்த விகாரையை அமைத்த கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் புற்றுநோயால் நேற்று மகரகம மருத்துவமனையில் மரணமானார்.
அவரது சடலம் இன்று,அதிகாலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் அமைந்துள்ள விகாரையில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அறிந்த ஆலய நிர்வாகத்தினர், சடலத்தை விகாரைக்கு கொண்டு வந்து இறுதிக்கிரியை மேற்கொள்ளும் முயற்சிக்கு தடைவிதிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, பதில் நீதிவானிடம் தடை கோரி காவல்துறையினர் விண்ணம் செய்தனர். அதற்கு, ஆலய வளவில் பௌத்த பிக்குவின் சடலத்தை எரிப்பதற்கு மாத்திரம் பதில் நீதிவான் தடை விதித்தார்.
இந்தநிலையில், விகாரை வளாகத்துக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் பௌத்த பிக்குவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பதற்றமான சூழல் காணப்படுகிறது,
அதேவேளை பௌத்த பிக்குவின் சடலத்தை எரிப்பதற்கு, வேறொரு இடத்தை தெரிவு செய்யும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
நாளை பிக்குவின் சடலம் முல்லைத்தீவு மாவட்டத்தில், தகனம் செய்யப்படவுள்ளது.