ஈழத்தம்பதிகளின் இறுதி நிமிடங்கள்;?
19 Sep,2019
அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையர்களான பிரியா – நடேசன், இவர்களுக்கு அந்நாட்டில் பிறந்த மகள்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பளிக்கும் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
அகதித் தஞ்சம் கோரி பிரியா, நடேசன் ஆகியோர் 2012, 2013 ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சென்றடைந்தனர்.
அந்நாட்டில் திருமண பந்தத்தில் இணைந்த இருவருக்கும் கோபிகா (வயது 4), தருணிகா (வயது 2) பிள்ளைகள் பிறந்தனர். இந்நிலையில் இக்குடும்பத்தவர்களை அவுஸ்ரேலிய அரசாங்கம் நாடு கடத்தத் தீர்மானித்தது.
அவுஸ்ரேலிய அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் மெல்பேர்ன் நீதிமன்றில் வழக்கு தொடுத்தனர். இதனால் இலங்கையர்களை நாடுகடத்தும் தீர்மானத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. எனினும் இன்று காலை முதல் இலங்கையர்களுக்கு ஆதவராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.