இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த சீனாவின் கடற்படை கப்பல்- கண்காணித்த இந்திய கடற்படை
16 Sep,2019
இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது.
சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.
இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன.
இந்த கண்காணிப்பு விமானங்கள் தொடர்ச்சியாக சீனாவின் கடற்படை கலங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றன.
தற்போது சீனாவின் ஏழு யுத்தகப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நடமாடுகின்றன என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவித்து சீனா கடற்படை இந்த கப்பல்களை இந்துசமுத்திரத்தில் இயக்குகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான ஒரு கப்பலை அவதானித்துள்ளதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும் சீனா கடற்படையின் முக்கிய நோக்கம் இந்து சமுத்திரத்தில் தனது வலிமையை வெளிப்படுத்துவதே என தெரிவித்துள்ள இந்திய கடற்படை வட்டாரங்கள் இந்து சமுத்திர பகுதியில் சீனா தனது கடற்படையின் பிரசன்னத்தை விஸ்தரிக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளன.
தொலைதூர கடற்பகுதிகளிற்கு பயன்படுத்துவதற்காக சீனா தனது விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி வருகின்றது என இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன