எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்!
16 Sep,2019
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழின் பிரதான சந்தைகள் எவையும் இன்று திறக்கப்படவில்லை என்பதோடு, யாழ்ப்பாணத்திற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு, தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் வழமைபோன்று இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.