5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் பணி- மக்கள் கடும் எதிர்ப்பு
14 Sep,2019
மன்னார், பள்ளிமுனை கிராமத்தில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று (சனிக்கிழமை) கையளித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, “மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிமுனை கிராமத்து மக்கள் குடியிருப்புக்கு மத்தியில், 5ஜி அலைக்கற்றை கோபுரம், அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை இரவோடு இரவாக ஆரம்பித்துள்ளனர்.
இதனால் எமது பகுதியில் வாழும் சிறுவர்கள், முதியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் பாதிப்படையும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த அலைக்கற்றை கோபுரத்தை அமைப்பதனால், 5ஜி காந்த கதிர் வீச்சினால் சரும நோய்கள், புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் குறித்த கோபுரத்தில் கமெரா பொருத்துவதினால் எங்களுடைய தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை செயற்பாடுகள் பாதிப்படையவும் வாய்ப்புக்கள் உள்ளன. சுற்றுப்புறச் சூழலும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு சுற்றுச் சூழல் அதிகார சபையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் பிரதேசத்தில் வாழும் மக்களின் சம்மதமும் பெறப்படவில்லை.
எனவே குறித்த 5ஜி அலைக்கற்றை கோபுரத்தை எமது பகுதியில் அமைப்பதற்கு பள்ளிமுனை கிராம மக்களாகிய நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம்.
ஆகையால் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காலை 6 மணியளவில் குறித்த பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தென் பகுதியில் இருந்து சிலர் வருகை தந்தபோது, மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து குறித்த பணிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது