நாடு கடத்தப்படுவதில் இருந்து ‘தமிழர் குடும்பத்துக்கு விலக்கு தர முடியாது’ - ஆஸ்திரேலிய பிரதமர் கைவிரிப்பு
03 Sep,2019
,
இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார். அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு திரும்பச்சென்றால் துன்புறுத்தல் நேரலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
தற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் வைத்து உள்ளனர்.
ஆனால் அவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்காட் மோரீசனை வற்புறுத்தி வருகின்றனர்.
நடேசலிங்கம் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய மக்களும் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடத்தினர்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்காட் மோரீசன் கை விரித்துவிட்டார்.
இதுபற்றி நேற்று அவர் கூறுகையில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்” என கூறினார்.
இருப்பினும் அவர்களை நாடு கடத்த அங்குள்ள கோர்ட்டு நாளை (புதன்கிழமை) வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த தடை தொடருமா என்பது நாளை தெரிய வரும்.