ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கிறது கூட்டமைப்பு!
28 Aug,2019
தமிழ் மக்களின் பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.
இதன்போது, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்தது.
அத்தோடு காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆராய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தமைக்கு அமைவாக, இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.