:
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்த காரணத்தினாலேயே பச்சிலைப்பள்ளி பிரதான வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சின்னையா சிவரூபன் இராணுவத்தினரால் திட்டமிட்ட முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதான வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சின்னையா சிவரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இவரின் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கே மனைவியும் அவரின் இரு பிள்ளைகளும் அவரை பார்வையிட்டுள்ளனர்.
அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் பயங்கர விளைவு இது. வைத்திய அத்தியட்சர் சின்னையா சிவரூபன் நீண்டகாலமாக யாழ். மாவட்டத்தின் சட்ட வைத்திய அதிகாரியாகப்பணி புரிந்தவர்.
தற்போது கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதான வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சராக இருக்கின்றார்.
இவர் துணிச்சல்மிக்கவர். மக்களுக்காகப் பணியாற்றுபவர். இதனால் இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்புணர்ச்சிகளும் இவரின் கைதுக்கு காரணமாக இருக்கலாமென நாம் கருதுகின்றோம்.
குறிப்பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சுமார் 300க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் இராணுவ,பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக, விபத்தில் இறந்ததாக தெரிவித்து அந்த விதத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்போது சட்ட வைத்திய அதிகாரியாக இருந்த சிவரூபன், பல மரணங்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளன, சைலன்சர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன,
நவீன முறைகளைப் பயன்படுத்திக்கொலை செய்யப்பட்டுள்ளன என்ற விடயங்களை வெளிக்கொண்டு வந்ததுடன் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தினார். அத்துடன் இரு தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாகவும் இவர் சாட்சியம் வழங்கினார்.
2006ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் ஒரு வீட்டுக்குள் இருந்த மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். அப்போது அவர்களை அங்கிருந்து கொண்டுவரமுடியாத சூழல் இருந்தது.
இதனையடுத்து யாழ். மாவட்டத்தின் நீதியரசராகவிருந்த ஸ்ரீநிதி நந்தசேகரனுடன் இணைந்து அப்போது யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்த சிவரூபன் அங்கு சென்று காயப்படடவர்களை மீட்டு வந்து சிகிச்சையளித்த வரலாறு அவருக்குண்டு. இதற்காக அவரை அமெரிக்கா அழைத்து விசேட விருது வழங்கியது.
இவ்வாறான துணிச்சல் மிக்க வைத்தியரின் பணியை முடக்குவதற்காகவும் தமிழர்களின் பல படுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியமாக இருப்பதனாலும் இராணுவத்தினரால் திட்டமிட்டு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் வைத்து கைது செய்யப்படவில்லை. மாறாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்களைக் கொல்வோம், அழிப்போம், நீங்கள் எங்கள் அடிமைகள் என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது.
இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை.
நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை என்றார்.