சரணடைந்தவர்களுக்கு நடந்தவற்றைக் கூறிவிட்டு கோத்தபாய தேர்தலில் போட்டியிட வேண்டும்
19 Aug,2019
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோத்தபாய தேர்தலில் போட்டியிட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு கட்சி கோத்தபாய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18. அத்தனை விடயங்களும் நடந்தபோது இராணுவத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒருவர், அதற்கான பொறுப்புக் கூறலை முதலில் தெரியப்படுத்த வேண்டும். அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் பாலகுமாரன், கவிஞர் ஒருவர், யோகி போன்றவர்கள் சரணடைந்திருக்கிறார்கள். வெளிப்படையாக அவர்களின் குடும்பங்களுக்கு முன்னே சரணடைந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் ஒரு கிறிஸ்தவ மதகுருவுடன் சேர்ந்து சரணடைந்தார்கள்.
எனவே அந்த சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு வாக்கு கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்.