தமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்!
18 Aug,2019
தமிழர்களை கொன்றுகுவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டாலும்கூட சிறுபான்மை மக்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்வதில் அவருக்கு சிக்கலான நிலை காணப்படுகின்றது. காரணம் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம், வெள்ளை வான் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் 70 வீதமான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வாக்களிக்கப் போவதில்லை. எனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியையே சந்திப்பார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகூடிய ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கிய பலம் பொருந்திய ஒரு கட்சியாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களையும் உள்வாங்கி இலங்கையில் சமத்துவத்தை உருவாக்கி இன, மத, மொழி பேதமின்றி ஆட்சி செய்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும்.
தமிழர்களை கொன்றுகுவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது” என மேலும் தெரிவித்துள்ளார்.