புலிகள் மௌனித்த பிற்பாடே த.தே.கூ அரசியலை முன்னெடுத்தது’
13 Aug,2019
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழ் மக்களுக்காகப் போராடியதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், 2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்த பிற்பாடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுநேர அரசியல் பணியை, ஜனநாயக ரீதியாக முன்னெடுத்ததாகத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களைத் தெளிவூட்டும் கூட்டம், அவரது தலைமையில், களுவாஞ்சிகுடியில் இன்று (12) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய அரசியல் பணியை முன்னெடுக்க தேசிய கட்சிகள் பெரும் தடையாகவும், சவாலாகவும் இருந்து வருகின்றன என்றார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்த்துவைக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்மக்களையும் ஏமாற்றியமையினாலலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவை, கூட்டமைப்பு முழுமையாக எதிர்த்துத் தோற்கடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவையை தோற்கடிப்பதற்காகத்தான் நாங்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தாம் ஆதரித்தோம் எனவும் இதைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தெளிவூட்டல் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்கொண்டனர்.