சிங்களத் தலைவர்கள் எவரும் தமிழருக்குத் தீர்வு தரமாட்டார்!
11 Aug,2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தென்பகுதி தீவிரமாகியுள்ளது. ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரியாக வரும் என்பது தென்பகுதி சார்ந்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் நினைப்பாகும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தெரிவுப் பிரச்சினைகளுக்குச் சிங்கள அரசியல் கட்சிகள் முகங்கொடுத்துள்ளன.
இதில் மகிந்த ராஜபக்இ தரப்பின் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்இவை நிறுத்துவதென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது.
ஏதேனும் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டாலன்றி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்இ என்பதில் மாற்றுத் தெரிவு இல்லை.
மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதிருக்கின்ற கேள்வி. முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஆர். பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய தேசிய முன்னணிக் குள் வலுத்து வருகிறது. அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தகைமை கொண்டவர் என்ற கருத்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கவே செய்கிறது. எனினும் இந்த இரண்டு தெரிவுகள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முகம் சுழிப்பவராக இருக்கின்ற வகையில், ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டால் என்ன என்று அவர் எண்ணுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
எதுஎவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படாவிட்டால், மூன்று முக்கிய புள்ளிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவர் என அறுதியிட்டுக் கூற முடியும். இவ்வாறு போட்டியிடுகின்ற மூவரில் சஜித் பிரேமதாசவும் ஒருவர் என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும். இவ்வாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் பட்சத்தில் அவ ருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியும் இருக்கும்.
எதுஎவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் போட்டியிடலாம். யாரும் வெற்றி பெறலாம்.
ஆனால் ஜனாதிபதியாக யார் வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டார். தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்க மாட்டார் என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.
நான் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று எவர் கூறினாலும் அவர் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்பதுதான் உண்மை.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்கள் செயற்படுவது இங்கு முக்கியமானது. மாறாக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால், ஏமாற்றம்தான் தமிழ் மக்களுக்கு மிச்சமாக இருக்கும்.