கிருசாந்திஸ ஒரு பெரும் துயரத்தின் கதை!
08 Aug,2019
இந்த பெயரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும்தான்ஸ தமது படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் மெய்ப்பித்த சம்பவம் அது.
நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீரசாகசமாக கருதும் இனத்திற்கு, இந்த சம்பவம் ஒரு மறக்க முடியாத உறுத்தல்தான்.
ஆனால் தமிழர்களை பொறுத்தவரை அது நீதிக்கான பயணத்தின் குறிகாட்டிஸ அரச பயங்கரவாதத்தின் ஆவணங்களில் ஒன்றுஸ
கிருசாந்தி குமாரசாமி கொல்லப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
இராணுவ முற்றுகைக்குள் இருந்த குடாநாட்டின் அடைக்கப்பட்ட கதவுகளிற்குள் நிகழ்ந்த அந்த கொடூரத்தின் மீள் நினைவிது. நினைக்கவே மயிர்கூச்செறியும் அந்த துயரத்தின் நாட்களிற்கு உங்களை அழைத்து செல்கிறோம்.
1996 செப்ரெம்பர் 07ம் திகதி.
காலை ஆறு மணிக்கெல்லாம் சரஸ்வதி படத்தின் முன் அந்த உயர்தர மாணவி நின்றாள்.
அப்பொழுது நடந்து கொண்டிருந்த உயர்தர பரீட்சையில் அந்த மாணவி தோற்றுகிறாள். அன்றைய பாடத்தை சிறப்பாக எதிர்கொள்ளும் தைரியத்தை கடவுளிடம் கேட்டிருக்க வேண்டும்.
அடுத்த சில மணி நேரங்களில் அவளுக்கான இரசாயனவியல் பரீட்சைகள் ஆரம்பிக்கவிருந்தன.
அவள்தான் கிருசாந்தி குமாரசாமி. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியான சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி. சாதாரண தர பரீட்சையில் 7 டி, 1 சி என சிறப்பு பெறுபேறு பெற்றிருந்தாலும், உயர்தர பரீட்சை பரபரப்பு அவளுக்குள் இருந்திருக்க வேண்டும்.
தாயார் தயாரித்து கொடுத்த காலையுணவை சரியாக சாப்பிடவில்லை. அவசரமாக சாப்பிட்டு விட்டு, மீண்டும் சிறிதுநேரம் படித்து விட்டு பாடசாலைக்கு கிளம்பினார்.
9.30 இற்கு பரீட்சை ஆரம்பிக்கும். எப்படியும் பாடசாலை செல்வதற்கு ஒரு மணித்தியாலம் தேவை.
அப்பொழுது காலை 7.15. கைதடியிலிருந்த வீட்டிலிருந்து தனது சிவப்பு சைக்கிளில் வீட்டை விட்டு புறப்பட்டாள்.
பரீட்சையில் சிறப்பாக முகம் கொடுக்க தாயார் வாழ்த்தி விடைகொடுத்து அனுப்பினார். கிருசாந்தி தனது கண்ணிலிருந்து மறையும் வரை வீட்டு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் தாயார்.
கிருசாந்தியின் தாயர் இராசம்மா குமாரசாமி. 59 வயதானவர். இந்திய பல்கலைகழகமொன்றில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.
கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய உப அதிபர். அடுத்த வருடம் ஓய்வுபெற காத்திருந்தார்.
அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் பிரசாந்தி. கொழும்பில் அப்போது கல்விகற்றுக் கொண்டிருந்தார்.
அடுத்தவர் கிருசாந்தி. கடைக்குட்டி பிரணவன். க.பொ.த சாதாரணதரம் எழுதிவிட்டு பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார். துரதிஸ்டவசமாக 1984இல் தனது கணவனை இரசாம்மா இழந்து விட்டார்.
அன்று சனிக்கிழமை. அன்று அவர் விரதம். விடுமுறை தினமும். இராசம்மா கோவிலுக்கு சென்றார்.
வரும் வழியிலுள்ள சக ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கும் சென்று கொஞ்ச நேரம் கதைத்து கொண்டிருந்தார்.
மதிய உணவை பிள்ளைகளுடன் எடுப்பதே இராசம்மாவின் வழக்கம். அன்றும் மகளிற்காக காத்திருந்தார்.
கிருசாந்தியின் பரீட்சை 9.30 இற்கு ஆரம்பித்து 11.30 இற்கு முடிந்துவிடும் என்பது அவருக்கு தெரியும். 12.30 இற்கு எல்லாம் மகள் வந்துவிட வேண்டும். காத்திருந்தார்ஸ காத்திருந்தார்.
எதிர்பார்த்த நேரத்திற்கு கிருசாந்தி வீடு திரும்பவில்லை. ஆரம்பத்தில் வழக்கமான தாமதமாகத்தான் நினைத்தார்.
நேரமாகிக் கொண்டு போக பதற்றமடைய தொடங்கினார். அவருக்கு ஏதோ கடுமையான பயம் ஏற்பட, அருகிலிருந்த சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை சொன்னார். இப்பொழுது பதற்றம் இரு மனங்களில்.
இருவரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து, கிருசாந்திக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.
அப்பொழுது வீட்டிற்கு பதற்றத்துடன் கிருபாமூர்த்தி என்பவர் வந்தார். இராசம்மா குடும்பத்தின் நீண்டகால குடும்ப நண்பர் அவர்.
ஒரு தாயாக இராசம்மா அறிய அச்சப்படும் அந்த துரதிஸ்ட செய்தியை அவர் சொன்னார். கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்!
செம்மணி காவலரண் பற்றிய விளக்கம் அதிகமாக தேவையில்லை.
தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பரந்த நீர் மற்றும் சதுப்பாலான பகுதி. அங்கு மயானமொன்றும் இருந்தது.
அருகிலுள்ள வீதியில் அந்த காவலரண் அமைந்தது. அப்பொழுது அது ஒரு மரணபொறியாக இயங்கியதென்பதை பின்னாளில் கிருசாந்தி விவகாரம் வெளிப்படுத்தியது.
இது விபரீதமானதென்பதை நொடியில் இராசம்மா உணர்ந்தார். ஒரு விநாடியும் தாமதிக்காமல் அங்கு செல்ல இராசம்மா முடிவெடுத்தார்.
கிருபாமூர்த்தியிடம் உதவி கேட்டார். எந்த தயக்கமுமின்றி அவரும் ஏற்றுக்கொண்டார். தனது மோட்டார் சைக்கிளில் இராசம்மாவை ஏற்றிக்கொண்டு அவர் அங்கு விரைந்தார். அவர்களின் பின்னால் பிரணவன் தனது சைக்கிளில் விரைந்தார்.
கைதடியில் உள்ள தமது வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்ட அந்த தருணத்தின் பின், அவர்கள் உலகின் எந்த வீட்டிற்கும் திரும்பவில்லை. ஒரு மரண சுழலை நோக்கி பயணமானார்கள்.
மயானத்திற்கு அருகில் இருந்த காவலரணிற்கு சென்றனர். அதுதான் அவர்கள் கடைசியாக சென்ற இடம். அதன் பின் கிருசாந்தியோ, அவர்களோ வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலை கிருசாந்தியின் மாமாவும் இன்னொருவரும் செம்மணி காவலரணிற்கு சென்று விடயத்தை கேட்டனர்.
யாரையும் கைது செய்யவில்லையென இராணுவம் மறுத்துவிட்டது. பின்னர், அப்போதைய யாழ்ப்பாண தபாலதிபர் சு.கோடீஸ்வரனை சந்தித்து விடயத்தை சொன்னார்கள்.
கோடீஸ்வரனும் கிருசாந்தி குடும்பத்தின் நெருங்கிய உறவினர்தான். தன்னிடம் வந்தவர்களை அழைத்துக் கொண்டு புங்கன்குளம் இராணுவ முகாமிற்கு கோடீஸ்வரன் சென்றார்.
கிருசாந்தி, தாயார், சகோதரன், அயலவர் காணாமல் போன விடயத்தை இராணுவத்திற்கு அறிவித்தார். கிருசாந்தி காணாமல் போன இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குள் தகவல் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியான தகவல்களில், கிருசாந்தி பரீட்சை முடிந்ததும், பாடசாலையில் இருந்து மரண வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. கைதடியில் இராணுவ வாகனம் மோதி மரணமான மாணவியின் மரண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோதே செம்மணி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டார்.
கிருசாந்தியை கண்டுபிடிக்கும் முயற்சிகளை கோடீஸ்வரனும் உறவினர்களும் ஆரம்பித்தனர். ஒவ்வொரு முகாம் முகாமாக அலைந்தனர். வழக்கம்போல எல்லா முகாம்களிலும் இராணுவம் கையை விரித்தது.
இந்த சமயத்தில் ஒரு சடுதியான திருப்புமுனை ஏற்பட்டது. கோடீஸ்வரனின் சகோதரியின் இரண்டு மகன்கள் பிரணவனுடன் நெருக்கமான நண்பர்கள். ஒன்றாக திரிவது, கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார்கள்.
ஒருநாள் கைதடியில் இருந்து இந்துக்கல்லூரிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அண்மையில் இருந்த சைக்கிள் கடையொன்றில் ஒரு செயின் கவர் தொங்கியதை கவனித்தனர்.
அதில் HONDA என பெரிய எழுத்தில் ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் ஸ்டிக்கர் அது.
கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் செயின் கவரிலும் அப்படி ஒட்டப்பட்டிருப்பது அவர்களிற்கு தெரியும். உடனே திரும்பி வந்து, பார்த்தார்கள். அது பிரணவனின் சைக்கிள் செயின் கவர்தான்!
வீட்டுக்கு வந்து விடயத்தை சொல்லஸ கிருசாந்தியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தபாலதிபர் சு.கோடீஸ்வரனிற்கு விடயம் அறிவிக்கப்பட்டது.
அவர் பொலிசாருக்கு தகவலை தெரிவித்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த கடைக்கு சென்றார்.
சைக்கிளை அவர்கள் அடையாளம் காட்ட, பொலிசார் சைக்கிள் குறித்து விசாரணை செய்தனர்.
மேளம் வாசிப்பவர் ஒருவர்தான் தனக்கு விற்பனை செய்ததாக கடைக்காரர் கூறினார். மேளம் வாசிப்பரிடம் விசாரித்தபோது, செம்மணி சோதனைசாவடியில் கடமையில் உள்ள சிப்பாய் ஒருவர் தன்னிடம் விற்பனை செய்ததாக அவர் கூறினார். இதுதான் கிருசாந்தி காணாமல் போன மர்மத்தை விலக்கிய திறப்பு.
இந்த சம்பவங்கள் நடந்த போது குடாநாடு இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் இருந்தது.
நடப்பதெதுவும் வெளியுலகத்திற்கு சரியாக தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக இந்த சம்பவம் வெளியில் கசியாமல் இரகசியம் பேணிது இராணுவம். கொழும்பிலிருந்த ஊடகங்களும் மௌனமாக இருந்தன.
கொழும்பில் இருந்த மனிதஉரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான பூபாலன் இந்த விடயத்தில் அதிக அக்கறையெடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோசெப் பரராஜசிங்கத்திடம் விடயத்தை தெரியப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் விடயத்தை கவனப்படுத்தினார் பரராஜசிங்கம். சட்டத்தரணி பூபாலன் இதுபற்றி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடமும் இதை தெரிவித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயமுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் சந்திரிகாவும் அக்கறை காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சராக அவர் சில இறுக்கமான நடவடிக்கைகள் எடுத்ததும் விடயம் வெளிப்பட முக்கிய காரணம்.
சந்திரிகாவின் உத்தரவையடுத்து, லெப்.கேணல் குணரட்ண தலைமையிலான இராணுவகுழு யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது.
கிருசாந்தி காணாமல் போன தினத்தில் செம்மணி காவலரணில் கடமையில் இருந்தவர்கள் வேறு முகாம்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.
எனினும், அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.
கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதை, பின்னர் கிருசாந்தி, இராசம்மா, பிரணவன், கிருபாமூர்த்தியை கொலை செய்ததை இராணுவச் சிப்பாய்கள் ஏற்றுக் கொண்டனர்.
அந்த காவலரணில் நிற்கும் சிப்பாய்கள் வழக்கமாக கிருசாந்தியை நக்கலடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடுமையான முகபாவத்தின் மூலம் அதை கவனிக்காமல் கிருசாந்தி சென்று வருவார். இது சிப்பாய்களிற்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவ தினமான அன்று மாலை ஆறு மணிக்கு அண்மையாக சோதனை சாவடியை கிருசாந்தி கடக்க முயன்றார். அப்போது கோப்ரல் தர அதிகாரியொருவரே கிருசாந்தியை வழிமறித்து, சோதனைசாவடிக்குள் வருமாறு கட்டளையிட்டார்.
இரண்டு பொலிசார், ஒன்பது இராணுவத்தினர் என பதினொருவர் அந்த சிறிய பிஞ்சை கொடூரமாக சிதைத்துள்ளனர்.
கிருசாந்தியை தேடிச்சென்ற மற்றைய மூவரையும் அடித்து துன்புறுத்தி கழுதை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கிருசாந்தியையும் கொலை செய்து புதைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதை சிப்பாய்கள் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.
கொல்லப்பட்டு 45 நாட்களின் பின்னர் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. மூன்று குழிகளில் நான்கு சடலங்களும் புதைக்கப்பட்டிருந்தன. கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த காவலரணிற்கு சிறிது தூரத்திலேயே சடலங்கள் மீட்கப்பட்டன.
பின்னர் நடந்த விசாரணையில் கிருசாந்தி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானதும், விடயம் வெளியில் தெரியாமலிருக்க மற்றைய மூவரும் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.
செம்மணி கொலை வலயத்தில் எத்தனை பேர் புதைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 600 இற்கும் அதிகமானவர்களை கொன்று புதைத்ததாக படைச்சிப்பாய் ஒருவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் தபாலதிபர் கோடீஸ்வரன் போன்ற சிலரது முயற்சியால் வெளிப்பட்ட உண்மை, பின்னர் குமார் பொன்னம்பலம், பூபாலன், பரராஜசிங்கம் போன்றவர்களின் ஒத்துழைப்புடன் உலகறிந்தது. இவர்களின் முயற்சியால் கிருசாந்தி விவகாரத்தின் மர்மம் வெளிப்பட்டது.
ஆனால் குடாநாட்டில் காணாமல் போன ஏனைவர்களிற்கு யார் பொறுப்பு கூறுவது? இன்றும் போராடிக் கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு யார் பொறுப்பு கூறுவது?