தமிழர்களின் இரத்தத்தை குடித்த ஓநாய்கள் – ஸ்ரீதரன் எம்.பி.
01 Aug,2019
அவசரகாலச் சட்டத்தினால் வடக்குக்கே அதிக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அவசரகால சட்டத்தினை பயன்படுத்தியே வடக்கில் இளைஞர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்த நாட்டில் எந்த தலைவருக்கும் இதய சுத்தி இல்லை.
அனைவரும் தமிழர்களின் இரத்தம் குடித்த ஓநாய்கள் தான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம் அவர் சாட்டினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ள இந்த அவசரகாலச்சட்டத்தின் விதிகள் அதனூடாகப்பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் வடக்கு, கிழக்கில் தான் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
இவை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியவகையில் உள்ளன. இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகும்.
இது மிகவும் ஆபத்தானது. இனரீதியானது. குறிப்பாக நிலங்களைப்பறித்தல், தமிழர்களின் இருப்பிடங்களை இல்லாது செய்தல், அவர்களின் தொன்மையான அடையாளங்களை அழித்தல், வளங்களை சூறையாடுதல் போன்ற கபளீகர நடவடிக்கைகள் துல்லியமாக இடம்பெறுகின்றன.
அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலர் வெளியில் திரியமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019-07-20 ஆம் திகதி மானிப்பாயில் பொலிஸாரால் செல்வரத்தினம் கவி கஜன் என்ற 23 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் இதுவரை சுடப்படுவதற்கான சரியான ஆதாரங்கள், ஆவணங்கள் பொலிஸாரால் முன்வைக்கப்படவில்லை.
பொலிஸாருக்குள்ள குற்றவாளிகளை கைது செய்தல், நீதிமன்றம் முன் நிறுத்துதல் என்ற அதிகாரத்தை மீறி பொதுமக்களை சுட்டுக்கொல்கின்ற சட்டங்களை அவர்களுக்கு வழங்கியது யார்? உடனடியாகவே கண்ட இடங்களில் சுடுகின்ற சட்டங்களைப் பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவுபேரை சுடவேண்டிய நிலைமை வரும்.
இதே பொலிஸார் தான் கன்னியா வெந்நீரூற்று பிரச்சினையில் தென்கயிலை ஆதீனத்தையும் ஆலயக் காணிக்கு சொந்தக்காரியான ரமணியம்மாவையும் தமது வாகனத்தில் பேச்சுவார்த்தைக்கு, ஆலயத்தை வழிபடுவதற்கு அழைத்து சென்ற போது சிங்கள காடையர்கள் பொலிஸாருக்கு முன்னால் சுடுதண்ணீர்வீசினர்.
அப்போது இந்த பொலிஸார் ஏன் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தவில்லை? தமிழர் என்றால் எதனையும் செய்யலாம் என்ற நினைப்பிலேயே இவ்வாறான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன.
மானிப்பாயில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு தந்தை இல்லை. தாயார்தான் அவரை வளர்த்தார். ஒரேஒருமகன். அவர் கொல்லப்பட்ட நிலையில் அவரின் உடலை கொண்டுவருவதற்கு உதவியாக சென்ற அயலவர்களான 4 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
உடலைப்பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு சென்ற போது மானிப்பாய் பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இளைஞனின் உடலைக்காட்டுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டே கைது செய்யப்பட்டனர். பின்னர் சட்டத்தரணியின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் போராளிகள் கூட பொய்க் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுகின்றனர். அவசரகால சட்டத்தை மையமாக வைத்தே இவ்வாறான அபாயகரமான நிலைமை வடக்கில் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வெலிக்கடை படுகொலைக்கு தான் சாட்சியாக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவித்துள்ளார். அவரிடம் சாட்சியம் பெற வேண்டும்.
அது மட்டுமல்ல செம்மணி, அல்லைப்பிட்டி, மண்கும்பான் படுகொலைகள் தொடர்பிலும் அவரிடம் சாட்சியம் பெறவேண்டும் ஏனெனில் அப்படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தாவும் காரணம். அப்போது அவர் இராணுவ ஒட்டுக்குழுவாக இருந்தார் .
இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி எனற நிலையே உள்ளது. சில நீதிபதிகள் கூட நான் சிங்களவன் என்ற அடிப்படையிலேயே செயற்படுகின்றனர்.
நாவற்குழியில் காணாமல்போனவர்கள், படுகொலைசெய்யப் பட்டவர்கள் தொடர்பான விசாரணையிலிருந்து நீதிபதி ஒருவர் விலகியதற்கும் இதுவே காரணம்.
இந்த நாட்டில் எந்த தலைவருக்கும் இதய சுத்தி இல்லை. அனைவரும் தமிழர்களின் இரத்தம் குடித்த ஓநாய்கள்தான் என்ன தான் வெளியில் வெள்ளைப்பூச்சு பூசினாலும் ஓநாய் ஓநாய்தான்.
நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் போய் யாழ்ப்பாணத்து எம்.பி.க்கள் வாகனப் பேமிட் கேட்பதாகக் கூறியுள்ளார். இவரும் ஓநாய்தான் என்றார்.