பொதுவாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது கட்சியின் நலனிலிருந்தே பிரச்சினைகளை நோக்குகின்றார்களேயொழிய தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொள்வதாகத் தெரியவில்லை.
பிரபல கவிஞரும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட்டவருமான சோ.பத்மநாதன் எந்த வரலாற்றுக் கடமையைச் செய்தாரோ நாமறிவோம். “கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமற் போனதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டுள்ளார் சம்பந்தன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக விளங்கும் சோ.ப – வரலாற்றுக் கடமை என்பது தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதுதான் என்பதை கடந்த காலத்தில் உணர்த்தியவர் என்பதால் இவரைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை. எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருப்பதற்கு இவர் என்ன புதுவை இரத்தினதுரையா?
அடுத்தவர் அங்கஜன் இராமநாதன். கன்னியா விடயத்தில் தமிழ் எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்கிறார். இவரே மைத்திரியின் கருணையினால் எம்.பி ஆனவரே ஒழிய மக்களின் வாக்குகளால் தெரிவாகவில்லை. இவரது கட்சித் தலைவரிடம் நிறைவேற்று அதிகாரம் உண்டு. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரரை விடுவித்த ஜனாதிபதியிடம் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க தனது செல்வாக்கை இவர் பயன்படுத்தியிருக்கலாமே, அதனைக் கேட்டிருந்தால் வேறு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இவரது எம்.பி பதவியை பறித்திருப்பார் மைத்திரி.
நல்லூர் திருவிழாவில் வீதித்தடையை மீறி வாகனத்தை உட்செலுத்தினார் என யாழ்.குடாநாட்டில் வெளிவரும் பத்திரிகை ஒன்று மகேஸ்வரன் மீது குற்றஞ்சாட்டியது. இதற்குப் பதிலளித்த மகேஸ்வரன், “நான் இத்தனை வருடமாக எம்.பியாக இருக்கிறேன், அதிலும் இத்தனை வருடமாகத் தான் பிரதியமைச்சராக இருக்கிறேன், ஆனால் பிறந்ததில் இருந்து இந்துவாகத் தான் இருக்கிறேன், எனக்குத் தெரியாதா, நல்லூர்த்; திருவிழாவின் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள்” எனக் கேட்டார். அங்கஜன் இராமநாதனும் பிறந்ததில் இருந்து இந்துவாகத் தான் இருப்பார் என நம்புகிறோம். அவரது தந்தையும் அப்படித்தான் என நினைக்கிறோம். அரசாங்கம் அச்சடித்து வழங்கிய பாடப் புத்தகங்களில் எப்படி இருக்கிறதோ, இவரது தந்தையார் படித்த பாடப்புத்தகங்களில் நிச்சயம் கன்னியாவின் வரலாறு இடம்பெற்றிருக்கும். வியாபார விடயங்களை மட்டுமல்ல இந்த விடயங்களையும் இராமநாதன் நிச்சயம் தனது மகனுக்குச் சொல்லியிருப்பார். ஆகையால் ஜனாதிபதியிடம் உண்மை நிலையை விளக்கி புத்தபிக்குகளை அங்கிருந்து அகற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர் என்ற வகையில் நிச்சயம் இவருக்கு உண்டு. தான் கடமை தவறியது மட்டுமல்லாது ஏனையவர்களையும் குற்றவாளிகளாக்க முயல்கிறார், வாலறுந்த நரி ஏனைய நரிகளிடம் வாலை அறுத்தால் மேலும் அழகாக இருப்போம் என்று சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.
அடுத்தவர் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா, “அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க கூட்டமைப்பு தவறினால் அதன் நாட்கள் எண்ணப்படும் நிலைமை தவிர்க்கப்பட முடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தனை காலமும் எமது இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் எட்டுக்கோடி தமிழர்களின் ஆதரவை நாம் தொடர்ந்து நாடி வந்திருக்கிறோம். ஆனால், தமிழ் இனத்தின் வரலாற்றையும் இருப்பையும் வாழ்வையும் சிதைக்கச் செயற்படும் பௌத்த – சிங்களப் பேரினவாதம் இந்துக்கோவில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் தொடர்ந்து குறிவைக்கப் போகிறது என்றால் இந்தத் திட்டத்தைத் தகர்த்தெறிய, இந்திய நாட்டின் நூறு கோடிக்கு மேற்பட்ட இந்துக்களின் நேரடித் தலையீட்டை நாம் பகிரங்கமாகக் கோர வேண்டியிருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் நாம்தான் பெரும்பான்மையினர் என அண்மையில் ஹிஸ்புல்லா மிரட்டியதுதான் நினைவுக்கு வருகிறது. அத்துடன் ஸ்ரீகாந்தாவின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் பிரான்சிலிருந்து வெளிவந்த ஒரு சஞ்சிகைக்கு அளித்த பேட்டியையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இக் கருத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பான ஒளி நாடாவிலும் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். “தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பினைந்துள்ளது. எனவே இந்தியா எடுக்கும் முடிவைப் பொறுத்தே எமது போராட்டம் அமையும். நாம் சிறந்த சிப்பாய்களாக இருப்போம்”
எப்போதுமே ரெலோவினர் தமது குடுமியை இந்தியாவின் கையிலேயே ஒப்படைத்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே இருவரது கருத்தையும் குறிப்பிடுகிறோம்.
ஸ்ரீகாந்தா ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு கட்சியின் செயலாளர். இவருக்கு தனது சட்டஞானத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது நினைவுக்கு வராதமை துரதிஷ்டமே. நிச்சயம் இவருக்குப் பின்னர் தான் சுமந்திரன் சட்டத்துறைக்குள் காலடி எடுத்து வைத்திருப்பர். ஆனால் காலங்காலமாக நாம் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம் - அவர்களின் சிப்பாய்களாக விளங்குவோம் என்பதை உணர்த்தி வருகின்றனர் ரெலோவினர்.
அடுத்தது இன்னொரு தரப்பு கன்னியா சம்பந்தமான கிரடிட் தமக்கே ஒட்டு மொத்தமாக வந்துவிட வேண்டும் என றூம் போட்டு யோசித்தது, இந்தப் பிரச்சினையை பிச்சைக்காரரின் புண்போல் மாறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தது. வைக்கோல் பட்டறைக்குப் பக்கத்தல் இருக்கும் நாய் தானும் தின்னாது: மாட்டையும் சாப்பிட விடாது. அது போலத் தான் இவர்களும். காணிச் சொந்தக்காரியான பெண்மணியிடம் சகல ஆவணங்களின் பிரதிகளையும் வாங்கிக் கொண்டனர் இவர்கள். ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றது போல எவருக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்றே சிந்தித்தனர். இப்பத்தான் இருக்கிறதே முகநூல், வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் போதித்தனர். சாதிக்கத் தெரிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான் என்று சொல்வார்கள். இவர்களுக்கு போதிக்க மட்டுமே தெரியும்.
எப்படியோ சுமந்திரன் சிலவற்றை சாதித்தார் என்பதை நேர்மையாக சிந்திப்பவர்கள் ஒப்புக்கொள்வர். இதற்காக சுமந்திரனின் ஏனைய குழறுபடிகளை ஆதரிப்பது என்பது பொருளாகாது.
பொதுவாக மாற்றுத் தலைமை என்று சொல்பவர்கள் தாம் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதில்லை. எதிரணியை திட்டுவது ஒன்றே இவர்களுக்குத் தெரிந்த கலை. திருக்கோயிலில் சுதந்திரக் கட்சியும், பொத்துவிலில் ஜ.தே.கவும் ஆட்சியமைக்க தமது கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர் என்பதை வசதியாக மறந்துவிடுவர். அவனில் சூத்தை இவனது முகத்தில் கரி என்பதே இவர்கள் சொல்லும் அரசியல். தங்களோடு கூட்டுச் சேர்ந்தால் தேசியவாதிகள். இல்லையெனில் கொலைகாரர்கள் எனக் கூசாமல் சொல்வார்கள். நாற்பதினாயிரம் படையினரின் சடலங்களைப் பெட்டியில் அனுப்புவோம் என்கிறீர்களே, முதலில் அதனைச் செய்தீர்களா? அல்லது அந்தக் காரியத்தில் உங்களது பங்களிப்பு எவ்வளவு? என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இதற்குள் தமிழரின் கடைசித் தேசியத் தலைவர் என்ற கனவும் உண்டு.
கல்முனை விவகாரத்தில் தமிழ் பேசும் மக்களிடையே முறுகல் நிலை உள்ளது தான், அதனைத் தீர்த்து வைக்க அல்லது பதற்றத்தைத் தணிக்க உங்களது பங்கு என்ன என்று கேட்டால் கையை விரிப்பார்கள். இத்தனை பதற்றத்திலும் கன்னியா விசுவாசத்தில் முஸ்லிம்கள் தமிழரின் பக்கம் நிற்க வேண்டும் என கல்முனை மேயர் றகீப் தெரிவித்தார். இதனை வரவேற்று இக் கருத்துக்கு நன்றி தெரிவித்து முன்னாள் வடக்கு முதலமைச்சர் உட்பட எந்த அரசியல்வாதிகளும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தமிழ், முஸ்லிம் பகைமை உணர்வை தணிய விடாமல் பார்த்துக் கொள்ளும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் போன்றவையிடமிருந்து இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான கருத்துகள் வருமென எதிர்பார்க்க முடியாது. கிழக்கின் தமிழ் முதலமைச்சர் உருவாக தயாகமகேயை முதலில் முதலமைச்சராக்க வேண்டும் என்று கோமாளித்தனமாகச் சொன்னவர்களிடம் கன்னியா விடயத்தில் ஆக்கபூர்வமான கருத்துகள் வெளிவரும் என எதிர்பார்க்க முடியாது. வடக்கு எதிர்ப்பு, சிங்களத்திடம் சரணடைவு என்பதே அறிவிக்கப்படாத இவர்களது அரசியல் கொள்கை.
தமக்கிடையே எந்த முரண்பாடு இருந்தாலும் தமிழருக்கு எதையும் வழங்கிவிடக் கூடாது என்பதில் ஜ.தே.க, சு.க, ஜே.வி.பி என சகல சிங்களக் கட்சிகளும் ஓரணியில் உள்ளன. முஸ்லிம்களின் பாதுகாப்பு என்ற வகையில் சகல தரப்பு பிரமுகர்களும் ஒன்று திரண்டனர். உலகில் பதவியேற்றதுக்கு பாராட்டுத் தெரிவித்து பதாகை வைப்பது தான் வழமை. காத்தான் குடியில் இனத்தின் பாதுகாப்புக்காக பதவியைத் துறந்த தலைவர்களுக்கு எமது நன்றிகள் என்று பதாகை கட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. என்னதான் இருந்தாலும் தமிழர்களை ஓரணியில் நிற்கவைக்க ஒருவரால் தான் முடிகிறது “பிரபாகரன் இருந்திருந்தால் ஆதீனத்தின் குருமுதல்வரின் முகத்தில் சுடுதேநீரை ஊற்ற முடிந்திருக்குமா?” என சாள்ஸ் எம்.பி கேட்டிருந்தார். இனியாவது தங்களைத் தோற்றத்தில் பிரபாகரன் போலக் காட்ட முயற்சிக்காமல் அவரது கொள்கைப் பிடிப்புடன் இயங்க தமிழ் அரசியல்வாதிகள் முன்வருவார்களா?