வடகிழக்கில் விகாரைகள் அமைக்க கூட்டமைப்பினர் 2 கோடி கப்பம் வாங்கியவர்கள் ;
28 Jul,2019
கடந்த வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பாரிய பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றனர். கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்துவரம் விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
காரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்