இராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு
26 Jul,2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் யுத்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பல்வேறு வகைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை தேடி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயில், பனி, மழை என எதையும் பொருட்படுத்தாது வீதியோரங்களில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை அரசாங்கத்திடம் தங்களுடைய உறவுகளை கேட்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் தங்களுடைய பிள்ளைகளுக்கான தீர்வு கோரி பல்வேறு வகையில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் இன்று (24) 869 ஆவது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த தனது மகனை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்ற நிலையிலும் அந்தக் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மற்றுமொரு தாயார் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலை திரேசம்பாள் என்ற தாயார் ஆவார்.