இலங்கைத் தமிழர்களை சிங்களத் திரைப்படங்கள் அடிமைகளாக சித்தரித்தன"
25 Jul,2019
இலங்கையிலுள்ள தமிழ் மக்களை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக மாற்றியது சிங்களத் திரைப்படங்கள் என சிங்கள தரப்பினரே இன்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
1970 தொடக்கம் 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் வெளியான சிங்களத் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்கள் அடிமைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தற்போது தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்றிரவு (24) நட்பு ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
கூலித் தொழிலாளிகள், சமையல்காரர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதணி சுத்திகரிப்பவர்கள் போன்ற காட்சிகளுக்கு தமிழர்கள் அல்லது தமிழ் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு சிங்களத் திரைப்படங்கள் அப்போது வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முக்கிய கதாபாத்திரங்களில் சிங்களவர்கள் நடித்துள்ளதாகவும், தமிழர்கள் சிங்கள திரைப்படங்களில் அடிமைகளை போன்று பிரதிபலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
இவ்வாறு சிங்களத் திரைப்படங்களில் தமிழர்கள் அடிமைகளை போன்ற செயற்படும் கதாபாத்திரங்கள் இடம்பெற்றமையினாலேயே தமிழர்கள் இன்றும் சிங்களவர்கள் மத்தியில் அடிமைகளை போன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக டலஸ் அழகபெரும சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மலையக பகுதிகளுக்கு செல்லும் சிங்களவர்கள், இன்றும் தமது வீட்டு வேலைகளுக்காக தமிழர்களை தேடி வருவதாகவும் அவர் நினைவூட்டினார்.
செய்திகளை பார்த்து தமது அறிவை வளர்த்துக் கொள்வோரைவிடவும், திரைப்படங்களை பார்த்து முன்னுதாரணமாக கொள்வோர் இன்றும் சமூகத்தில் உள்ளதாக கூறிய அவர், சிங்களத் திரைப்படங்களில் வெளியான இவ்வாறான காட்சிகளைக்கொண்டே தமிழர்களை அடிமைகள் போன்று சிங்களவர்கள் எண்ணி வருவதாகவும் கூறினார்.
இன்றைய சூழ்நிலையில் அந்த நிலைமை சற்று மாறியுள்ள போதிலும், முழுமையாக அந்த எண்ணப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும சுட்டிக்காட்டினார்.