பிணையில் வருகிறார் நளினி?
23 Jul,2019
பிணையில் வருகிறார் நளினி?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 6 மாதகாலம் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைகளில் நளினிக்கு ஒருமாத காலம் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நளினியை பிணையில் அனுப்பும் விதிகளை சிறைத்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நளினி இன்று பிணையில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.