வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற யாழ் இளைஞர்கள் கொழும்பில் பறிபோனது பல லட்ஷம்!
18 Jul,2019
வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்ற யாழ் இளைஞர்கள் மூவரை விமான நிலையத்திற்கு அருகில் நிற்கவைத்துவிட்டு முகவர் மாயமாகி சென்றுவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
கொழும்பிலிருந்த நபர் ஒருவர் ஒரு நாள் பழகிய பழக்கத்தில் யாழிலிருக்கும் நபரொருவருக்கு லண்டனில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் நட்ச்சத்திர விடுதியில் வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது, விசா ஒழுங்குகளையெல்லாம் அவர் செய்து தருகிறார், போற செலவுகளுக்கு ஒரு 5 லட்ஷம் தந்தால் சரி,அதுவும் லண்டன் போகும் பொது கொழும்பில் வைத்து தந்தால் சரி, எனக்கு மூன்றுபேர் தேவை உங்களின் உறவினர் யாரும் இருந்தால் சொல்லுங்கள் அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.
அதற்கு யாழிலிருக்கும் நபரொருவர் தானும் தன்னுடன் இருவர் வருவார்கள் எனக்கூறி, இரண்டு உறவினர்களையும் அழைத்துக்கொண்டு, லண்டனுக்கு 5 லட்ஷமா என்ற பேராசையில் அவசர அவசரமாக நகைகளை அடகுவைத்துவிட்டு ஒரு 5 நாட்களில் கொழும்பு சென்று விட்டார்கள்.
அங்கு சென்ற யாழ் நபர்களை சொகுசு கார்களில் ஏற்றிச்சென்ற கொழும்பு நபர், ஒரு நாள்முழுவதும் நட்ச்சத்திர விடுதியொன்றில் தங்கவைத்துவிட்டு மறுநாள் சொல்லியிருக்கிறார் உங்களுடைய அலுவல்கள் எல்லாம் சரி நீங்கள் இரவு லண்டன் செல்லலாம் தயாராகுங்கள் என்று கூறிவிட்டு, வாடகைக்கு ஒரு வாகனத்தை அமர்த்தி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்கிறார்கள், அப்போது முகவர் வாகனத்திற்குள்ளேயே பணத்தை தாருங்கள் விமான நிலையத்தில் வைத்து வாங்க முடியாது என்று பணத்தை வாங்கிவிட்டு, பாதிவழியில் அவரின் நண்பரை சந்திப்பதுபோல் சந்தித்துவிட்டு நீங்கள் முன்னுக்கு சென்று விமான நிலையத்திற்கு செல்லுங்கள் நான் நண்பருடன் கதைத்துக்கொண்டு பின்னால் நண்பரின் வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறேன் என கூறிவிட்டு பணத்துடன் மாயமாகி விட்டார்.
பின்னால் முகவர் வந்த வாகனத்தை திடீரென காணவில்லை, லண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்கள் பணத்தையும் இழந்துவிட்டு விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி முகவரின் வாகனம் வருகிறதா என பலமணி நேரம் காத்திருந்தும்தான் மிச்சம்.
முகவரை அடையாளப்படுத்த எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையிலும், பணம் கொடுத்தமைக்கு ஆதாரமில்லாத நிலையிலும், பொலிஸ் முறைப்பாடும் கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர்.
குறைந்த செலவில் செல்லலாம் என்ற ஆசையும், ஆசை மிகுதியால் முகவர் பற்றி ஆராயாமல் செல்லும் உணர்ச்சிவசப்பட்ட அறிவும் இன்று நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டது.
இப்படி நாளுக்குநாள் வெளிநாட்டு ஆசையால் ஏமாற்றப்படுகின்றனர் வடக்கு தமிழ் இளைஞர்கள்.
இது தொடர்பில் தமிழ் இளைஞர்கள் ஒரு தெளிவு நிலைக்கு வர வேண்டும் என்பதே எமது கோரிக்கை.