வைகோ இந்தியாவின் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். 15 வருடங்களாக இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தடைப்பட்டிருந்த அவரது குரல், இனிமேல் எதிரொலிக்கும் என்று, தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
மக்களவையிலும், மாநிலங்களவையும் வைகோ எம்.பியாக இருந்திருக்கிறார். அதில் ஒரு முறை அ.தி.மு.க கூட்டணியிலும், இன்னொரு முறை தி.மு.க கூட்டணியிலும் நின்று தேர்தலைச் சந்தித்து நேரடியாக வெற்றி பெற்று, மக்களவைக்கு சென்றார்.
மாநிலங்களவையில் 18 ஆண்டுகள் தி.மு.கவில் இருந்த போது, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் குரலை எதிரொலித்தார். ‘கலைஞரின் போர்வாள்’ என்று பாராட்டப்பட்ட வைகோ, இன்றைக்கு அரசியல் வரலாற்றை முழுவதும் அறிந்த, மிகச்சிறந்த தமிழக அரசியல்வாதிகளில் ஒருவராவார். குறிப்பாக, திராவிட இயக்க வரலாற்றின் அடிப்படை தெரிந்தவர். அதே தி.மு.கவின் ஆதரவுடன், இப்போது மீண்டும் மாநிலங்களவைக்கு வைகோ செல்கிறார்.
தமிழகத்தில் ஆறு இராஜ்ய சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் வைகோவின் வேட்புமனுவால் பரபரப்பானது. தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொழிலாளர் அணியைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும், மூன்றாவது இடம் வைகோவுக்கு என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
அதேபோல், அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், முகமது ஜோன் என்று அறிவிக்கப்பட்டாலும், மூன்றாவது இடம் தேர்தல் ஒப்பந்தப்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு என்று முடிவு செய்யப்பட்டது.
தேர்தலில் போட்டியில்லை என்ற நிலையில், இரு கட்சிகளில் இருந்தும் தலா மூவர் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்று முன்கூட்டியே முடிவானது. ஆனால், திடீரென்று வைகோ மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. ஜூலை ஐந்தாம் திகதி தீர்ப்பு என்று, எம்.பி- எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது. அறிவித்தபடி, வைகோ வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டிய ஜூலை ஐந்தாம் திகதி தீர்ப்பு வெளிவந்தது.
இலங்கையில் போர் நடைபெற்ற காலகட்டத்தில், ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதில் மத்திய அரசை குற்றம் சாட்டியும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் வைகோ பேசியிருந்தார். இதனால், வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, இரு பிரிவுகளின் கீழ்ப் தாக்கல் செய்யப்பட்டது. முதல் பிரிவு 153A; அதாவது, இனத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் பகையை வளர்ப்பது.
இன்னொரு பிரிவு 124A; இது தேசத்துரோக வழக்கு. இந்தப் பிரிவைத்தான் நீக்க வேண்டும் என்று இந்தியாவில் நீண்ட காலமாகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த இரு பிரிவுகளில், 153A என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ், “வைகோ குற்றவாளி” என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் ஆறு வருடங்கள் மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் நிற்க முடியாது. அதாவது, இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8(1)இன் கீழ், வெறும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, ஒரு ரூபாய் அபாரதம் விதித்தாலே போதும்; சிறைத் தண்டனை தேவையில்லை. அது தேர்தலில் நிற்கத் தகுதியிழப்பாக ஆகி விடும்.
இன்னொரு பிரிவான 124Aஐ பொறுத்தமட்டில், வெறும் தண்டனையோ அல்லது இன்னொரு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவான 8(2)இன் கீழ், ஆறு மாத காலம் சிறைத் தண்டனையோ பெற்றால் கூட, தகுதியிழப்பு வராது. ஏனென்றால், இந்த 8(1), 8(2) ஆகிய பிரிவுகளின் கீழ், தேசத்துரோகப் பிரிவான 124A இடம்பெறவில்லை. ஆதலால், இந்தப் பிரிவின் கீழ் ஒருவர் தேர்தலில் நிற்பதற்குத் தகுதியிழப்புப் பெற வேண்டும் என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3) பிரிவு சொல்கிறது.
ஆகவே, 124A பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வைகோ, தாராளமாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியும். இதுதான் சட்டப்படியான நிலைமை.
ஆனால், திடீரென்று வைகோவின் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதால், அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதங்களிலும் தலைப்புச் செய்தியானது.
சட்டம் தெளிவாக இருந்தாலும், மாநிலங்களவைத் தேர்தலை நடத்தும் அதிகாரி, தேர்தல் ஆணையகத்துக்கு “கவைகோவின் மனுவை ஏற்கலாமா” என்று கேள்வி கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளதாக வெளிவந்த செய்தி, பெரும் பரபரப்பை உருவாக்கியது. இது தி.மு.க போன்ற, மூத்த வழக்கறிஞர்கள் நிரம்பியுள்ள கட்சிக்கே பதற்றத்தை ஏற்படுத்தியது.
சட்டப்படி வைகோவின் மனுவை நிராகரிக்க முடியாது என்றாலும், ஒருவேளை நடந்து விட்டால், ஒரு எம்.பி பதவி வீணாகி விடுமே என்ற கவலை, தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பற்றிக் கொண்டது. இதன் விளைவாக, வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அதை ஈடுசெய்ய, தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
தி.மு.க மூன்று இடங்களில் வெற்றி பெற முடியும். ஆனால், போட்டியில் நான்கு பேர் என்று வினோதமான சூழ்நிலை அரங்கேறியது. ஆனால், ‘புயல்’ கரையை நிச்சயம் கடந்தே தீரும் என்பது போல், வைகோவின் வேட்பு மனு விவகாரம் முடிவுக்கு வந்து, அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு, ஜூலை பத்தாம் திகதி மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றைக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரிப் பிரச்சினை, ஹிந்தி திணிப்பு, தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட நினைக்கும் பல்வேறு புதிய சக்திகள் என்று வித்தியாசமான சூழல் நிலவுகிறது.
இன்னொரு பக்கம், பா.ஜ.க அசுர பலத்துடன் வெற்றி பெற்றுச் சென்ற முறையை விட, அதிக எண்ணிக்கையில் மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், வைகோ போன்று ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடனும் ஒலிக்கும் ஒரு குரல் மாநிலங்களவைக்குச் செல்வது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தனிப் பலம்.
ஆனால், வைக்கோவின் கட்சியின் சார்பில், இரு எம்.பிக்கள் உள்ளனர். ஒரு எம்.பியான கணேசமூர்த்தி மக்களவையில் இருக்கிறார். இன்னொரு எம்.பியாகியுள்ள வைகோ மாநிலங்களவையில் இருக்கிறார். அதை உணர்ந்துள்ள வைகோ, “நான் தனியொரு எம்.பி; பேசுவதற்கு எனக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கிடைக்கின்ற நேரத்தில், தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுப்பேன்” என்று அறிவித்து விட்டார்.
ஜூலை பத்தாம் திகதி வெற்றி பெற்றவுடன், சான்றிதழைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்ற வைகோ, “கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பேன். ஜனநாயகத்துக்குப் பேராபத்தை உருவாக்கியுள்ள மதச்சார்பின்மையைத் தகர்க்கின்ற இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பை எதிர்ப்பேன். அண்ணாவின் குரல் ஒலித்த அவையில் எனக்கான வாய்ப்பைச் சரியாக பயன்படுத்துவேன். தமிழ் இனத்தை, தமிழகத்தை, தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், தமிழகத்தின் சுற்றுச்சூழலை நாசமாக்கக் கூடிய பல்வேறு திட்டங்களை எதிர்த்தும் எனது குரல் ஒலிக்கும்” என்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.
தமிழகத்தின் சார்பில் பல்வேறு எம்.பிக்கள் மக்களவை, மாநிலங்களவைக்குச் சென்றிருந்தாலும், மாநிலங்களவையில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், வைகோ, தி.மு.க சார்பில் உள்ள திருச்சி சிவா ஆகிய மூவரும் நாடாளுமன்றத்தில் அனைவரையும் கவரும் விதத்தில் பேசும் ஆற்றல் படைத்தவர்கள்.
இந்நிலையில், தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், வைகோவின் குரல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குமான குரலாக ஒலிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இலங்கை போருக்குப் பிறகான மனித உரிமை மீறல் பிரச்சினை, ஈழத்தமிழர்கள் நலன் பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்த வைகோ, 15 வருடங்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் பேசப் போகிறார். அதனால், ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகள், அமைப்புகளின் வரிசையில் வைகோ முதலிடத்தைப் பெறுகிறார்.
2009க்குப் பிறகு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெறுவது, வைகோவின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை