புலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும்; எழுதினால் நாடு தாங்காது: மாவை
16 Jul,2019
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலைகூட மிதிக்காதவர்கள் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுகிறார்கள்.
மற்றவர்களை விட புலிகளுடனான தொடர்பை அதிகம் அறிந்த நான், அதை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்காது என வெடிகுண்டை போட்டுள்ளார் மாவை சேனாதிராசா.
விடுதலைப் புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட அ.அமிர்தலிங்கத்திற்கு முதன்முறையாக பெரியளவிலான அஞ்சலி நிகழ்வை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஈ.சரவணபவன் நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இப்படி குண்டை போட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது-
“அமீரண்ணை போராளிகளை ஊக்கப்படுத்தினார். எவ்வளவு தூரம் நேசித்தார் என்பதை நாங்கள் அறிவோம்.
தம்பியையும் (பிரபாகரன்) அவர் சந்தித்தார். அவர் இந்தியாவில் இருந்தும் அவர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆனால் காலம் தவறாக கையாளப்பட்டுள்ளது. அல்லது அவர் இன்றுவரை இந்த இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்கும் நிலைமை இருந்திருக்கும். பலருக்கு இந்த வரலாறு தெரியாது. எனக்கு தெரியும்.
என்னால் வரலாற்றை எழுத முடியும். எல்லாவற்றையும் எழுதுவது கடினமாக இருக்கிறது.
புலிகளுடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை சொன்னால் நாடு தாங்காது. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும்.
கடந்தமாதம் இந்தியாவில் பழ நெடுமாறனை சந்தித்தபோது, அவரும் இதையெல்லாம் எழுதும்படி வலியுறுத்தினார்“ என்றார்.