கன்னியாவில் விகாரை ; துரோகச் செயலைக் கைவிட கூட்டமைப்பிடம் வலியுறுத்தும் விக்கி
15 Jul,2019
“கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும்” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“சகல தமிழ் கட்சிகளும் எமது இனத்தின் எதிர்கால இருப்பு பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து தமக்கு இடையிலான காழ்ப்புணர்வுகள் அரசியல் போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு முழுமையான “அரச எதிர்ப்பு” அரசியலை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும்.
இந்த அரசு முடுக்கிவிட்டுள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேலாவது ஏற்றுக்கொண்டு அரசுக்கு முண்டு கொடுக்கும் துரோகச் செயலை நிறுத்தவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்களின் ஆயிரம் ஆயிரம் காலங்களுக்கு முற்பட்ட இந்த புராதன வரலாற்றுப் பகுதியை தமிழ் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டப்பட்டுவரும் செய்தி தமிழ் மக்களின் நெஞ்சங்களை பிளப்பதுபோல இருக்கின்றது.
இலங்கையின் ஆதிவாசிகளான தமிழ் மக்களின் இருப்பு இன்னும் இந்த நாட்டில் எத்தனை காலத்துக்கு இருக்கப்போகின்றது என்ற நிதர்சனமான கேள்வியையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
முன்னெப்போதும் இல்லாதவகையில் காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகளும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரச இயந்திரத்தின் பணிகளாக்கப்பட்டு இராணுவத்தின் உதவியுடன் முழுமூச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்விடங்களின் வரலாறு திட்டமிடப்பட்டவகையில் திரிபுபடுத்தப்பட்டு செயற்கையான சான்றுகள் உருவாக்கப்பட்டு பௌத்தமயமாக்கலும் சிங்களமயமாக்கலும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவலி அதிகாரசபை, வீடமைப்பு அதிகாரசபை, வன இலாகா,வன ஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் போன்றன நன்கு ஒருங்கிணைந்தவாறான நடவடிக்கைகள் மூலம் வெளிப்படையாகவே முன்னெடுத்துவரப்படுகின்றன.
சிங்கள அரச தலைவர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை இவற்றுக்குப் பகிரங்கமாகவே அளித்துவருகின்றனர். இராணுவத்தினர் இதன் பொருட்டு அவர்களாலேயே பாவிக்கப்படுகின்றனர்.
கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் நேரடி உத்தரவுகளை வழங்கி ஊக்குவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கன்னியாவில் மட்டுமன்றி வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களிலும் பெருமளவில் இந்த நடவடிக்கைகள் திடீரென்று முழுமூச்சாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு கொக்கிளாயில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத இடங்களில் விகாரை அமைக்கப்படுவதை எம்மால் தடுக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பெரியளவிலான சிங்கள குடியேற்றத்துக்கான ஆயத்தமாக நாவற்குழியில் பௌத்த விகாரை எனது வீட்டில் இருந்து ஒரு சில மைல்கள் தூரத்தில் அமைக்கப்பட்டு இராணுவத்தின் துணையுடன் சில தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டுள்ளதை தடுக்க முடியவில்லை.
வலிகாமத்தில் எமது மக்களின் காணிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலமை கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் தொடர்கின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் அரச நிதியில் ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பண ஒதுக்கிட்டில் ஒரு ஏக்கர் காணியில் பெரியளவிலான விகாரை ஒன்றை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அறியமுடிகின்றது.
அங்கு பயிலும் சிங்கள மாணவர்கள் விகாரைக்கு சென்று வழிபடுவதற்கு ஒரு விகாரை தேவை என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
ஆனால், அதற்காக ஒரு ஏக்கர் காணியில் பெரியளவில் ஒரு பௌத்த விகாரை அமைக்கும் அரசின் உள்நோக்கத்தை எமது பல்கலைக்கழக அதிகாரிகளும் பொது மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
பௌத்த மாணவர்களின் வழிபாட்டுக்காகத்தான் விகாரை என்றால் அதனை சிறிய அளவில் நிர்மாணித்திருக்கலாம்.
அதேவேளை கிளிநொச்சியில் பௌத்த மாணவர்கள் சென்று வழிபடுவதற்கு ஏற்கனவே விகாரைகள் இருக்கின்றன. ஆகவே எமது அதிகாரிகள் இத்தகைய விடயங்களில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
அத்துடன், ஜனாதிபதியின் “கவனக்குறைவு” என்று கூறப்படும் ஏப்ரல் 21ந் திகதி குண்டு வெடிப்பு நிகழ்வுகளுக்கும் திடீரென்று மேற்கொள்ளப்படும் இந்த பௌத்த மயமாக்கல் நிகழ்வுகளுக்குமிடையில் சம்பந்தம் இருக்கின்றனவா என்று கேட்க வேண்டியுள்ளது. குண்டு வெடிப்பின் பின்னர் வட மாகாணத்தில் இராணுவத்தினரின் தேடுதல் முயற்சிகள் கடுமையாக இருந்தன.
பௌத்தமயமாக்கலுக்கு தமிழ் மக்கள் இடையூறு விளைவித்தால் தற்போதைய உயிர்த்த ஞாயிறின் பின்னைய காலகட்டத்தில் உடனே சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்ற ரீதியில் இவர்களுடைய திடீர் பௌத்தமயமாக்கல் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவோ நானறியேன்.
ஆகவே, எமது கண்முன்னே எமது உணர்வுகள், எதிர்ப்புக்கள் எதனையும் கண்டுகொள்ளாமல்,பொருட்படுத்தாமல் நம் முன் நடைபெறும் இந்த அநீதிகளை நாம் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
போருக்கு பின்னரான தமிழ் மக்களின் அரசியல் ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கிறது.
சகல தமிழ் கட்சிகளும் எமது இனத்தின் எதிர்கால இருப்பு பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து தமக்கு இடையிலான காழ்ப்புணர்வுகள் அரசியல் போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு முழுமையான “அரச எதிர்ப்பு” அரசியலை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும். மிகவும் நரித்தனமாகவும் கபடத்தனமாகவும் எமக்கு எதிராக ஒரு பெரும் கட்டமைப்பு ரீதியானதும் கலாசார ரீதியானதுமான இனப்படுகொலையை இந்த அரசு முடுக்கிவிட்டுள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேலாவது ஏற்றுக்கொண்டு அரசுக்கு முண்டு கொடுக்கும் துரோகச் செயலை நிறுத்தவேண்டும்.
எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில கண்துடைப்பு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் பொருட்டு அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக எமக்கு எதிரான இந்த ‘இன அழிப்பு”நடவடிக்கைகளை கண்டும் காணாததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதை இனியாவதுநிறுத்த வேண்டும்.
முழுமையான “அரச எதிர்ப்பு” அரசியலே எம் முன்னே இருக்கும் ஒரே வழி. தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு சர்வதேச சமூகம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் எமக்கு எதிரான இனப்படுகொலை செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையில் நிரந்தரமான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கும் உபாயங்கள், வழி வகைகளை ஆய்தறிந்து மேற்கொள்ளவேண்டும்.
இன்று கன்னியாவில் மக்கள் பெரும் அளவில் ஒன்று சேர்ந்து நடத்தும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் – என்றுள்ளது.