மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது ?
14 Jul,2019
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமே உருவாகும். அவர்களின் அரசாங்கத்தில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நாம் மறக்கவில்லை.
ஆகவேதான் இந்த அரசாங்கத்தை வீழ்த்தாதுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும். அதில் மக்கள் தமக்கான அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான
இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்போவதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அயல் நாட்டில் இருந்து தகவல் கிடைத்தும் அதனை அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கம் தோற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். அப்படி இந்த அரசாங்கம் பதவி விலகினால் அடுத்ததாக யார் ஆட்சியை அமைப்பது என்ற கேள்வி உள்ளது. அவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக் ஷவே மீண்டும் ஆட்சியை அமைப்பார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் மக்கள் ஜனாதிபதியையும் அரசையும் மாற்றியமைத்தனர்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மனித உரிமை மீறல்கள் சமூக,பொருளாதார உரிமை மீறல்கள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றன.
இதனால் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போதைய அரசு அவ்வாறான செயல்களை செய்யவில்லை. மனித உரிமை விடயங்களில் முன்னைய அரசை விடவும் மிகவும் சிறப்பானது என்று சொல்லமுடியாத போதிலும் ஓரளவு சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் மாற்றப்பட்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் சிறுபான்மை மக்களை எவ்வாறு நடத்துவார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த ராஜபக் ஷ ஆட்சியில் அதிகமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர் . எனவே புதிய அரசின் தமிழ் மக்கள் தொடர்பான கொள்கை தெரியாது தற்போதுள்ள அரசை நாம் எப்படி எதிர்த்து வாக்களிப்பது?நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எப்படி ஆதரவளிப்பது?
விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. புதிய அரசு அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும். இன்று காலை ஸநேற்று] திருகோணமலையிலுள்ள எனது வீட்டுக்கு முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு சம்பந்தன் வேலை வாய்ப்பு பெற்றுத்தரவில்லையென குற்றம்சாட்டினர். இன்று ஸநேற்று] அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமெனக்கூறினர். இந்த அரசில் கூட எமது இளைஞர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் தொடர்பான தமது கொள்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்குக்கூட நாம் ஆதரவளித்துள்ளோம். ஆனால் பொதுஜன பெரமுன தமிழ் மக்கள் தொடர்பான தமது கொள்கையை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
எனவே இது தொடர்பில் எதுவும் தெரியாது தற்போதுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்?எனவே கடவுள் அனுக்கிரகத்துடன் நாம் ஒரு முடிவை எடுத்தது அதன்படி செயற்படுவோம் என்றார்.