ஒருபோதும் நாம் தனி இராஜ்ஜியம் கோரவில்லை - சம்பந்தன்
08 Jul,2019
தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு அரசாங்கமும் காலத்தைக் கடத்துகின்றன. தமிழ் மக்களின் கோரிக்கை பாரபட்சமற்ற முறையில் நிறைவேற்றிக்கொடுக்கப்பட வேண்டும்.
பிரிவினையற்ற,ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எமது ஆட்சி நிலைமைகள் மாறிவிடும். தற்போதும் தமிழ்மக்கள் நீதியையும் சமாதானத்தையம் தங்களுக்கு தருமாறு கோரி நிற்கின்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளிலும் வரையறை காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதார அபிவித்திக்கு ஏற்ற திட்டங்களை இன்னும் அரசியல்வாதிகள் வகுக்க வில்லை. அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாகவே மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளை இன்னும் பெற்றுகொடுக்க முடியாமல் போயுள்ளது. சகோதர நாடுகள் அனைத்தும் முன்னேறி வரும் நிலையில் எமது நாட்டின் முன்னேற்றம் மாத்திரமே பின்தங்கிய நிலையில் உள்ளது. எமது தலைவர்கள் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினாலேயே தற்போது இந்த நிலை உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவை முன்னிட்டு மாத்தறையில் நேற்று மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்