திரிகோணமலை தமிழ் மாணவர்கள் கொலை: ஐ.நா. மனித உரிமை பேரவை கருத்து
07 Jul,2019
திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாருடன் ஐநா மனித உரிமை பேரவை நீதிக்காக முன்நிற்கும் என மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நீதி அமைப்பில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இல்லாமையானது, திரிகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் விடுதலை செய்யப்பட்டமை எடுத்துக்காட்டுகின்றது என அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை குறிப்பிடுகின்றது.
முக்கிய சாட்சியங்களும், பாதிக்கப்பட்டவர்களும் முன்வந்து சாட்சியங்களை வழங்குவதற்கு போதுமான பாதுகாப்பை உணரவில்லை என்பது உண்மை என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
தமிழ் மாணவர்களின் கொலை – 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை
திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பாதுகாப்பு பிரிவினர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 13 சந்தேக நபர்களும் திரிகோணமலை பிரதம நீதவான் எம்.எம்.மொஹமட் ஹம்சா முன்னிலையில் ஜுலை 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த பின்னணியில், அந்த குற்றச்சாட்டுக்கள் எதையும் நிரூபிப்பதற்கு போதுமானமான சாட்சியங்கள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே இவர்கள் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திரிகோணமலை கடற்கரை பகுதியில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
வாகனமொன்றில் வருகைத் தந்த சிலர், அந்த மாணவர்களை காந்தி சிலைக்கு அருகில் அழைத்து சென்று சுட்டுக்கொலை செய்ததாகவே கூறப்பட்டது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, மிக மோசமான மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலும் இந்த விடயம் பாரிய சவால்களை இலங்கைக்கு விடுத்திருந்தது.