போராட்டத்தின் வரலாற்று நூலில் தமிழ் தலைமைகள் மக்களை ஏமாற்றிய அத்தியாயமும் எழுதப்படும் : சி.வி.
07 Jul,2019
தமிழ் தேசிய போராட்டத்தின் வரலாற்று நூலில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட அத்தியாயத்தோடு, தமிழ் மக்களை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிய ஒரு அத்தியாயமும் எழுதப்படுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திரத்துக்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பதவிக்கு வந்து ஆட்சி நடத்திய அரசாங்கம், கூட்டமைப்பின் கண்களுக்கு முன்பாகவே வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்து குடியேற்றத் திட்டங்களை பாரியளவில் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மிக விரைவிலேயே தமிழ் மக்களின் கைகளை விட்டுச்செல்லும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. மகாவலித் திட்டம் தற்போது முல்லைத்தீவு நகரத்தையும் உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், வடக்கு கிழக்கு நிலத்தொடர்பை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டை மறுக்கும் நடவடிக்கைகளும் கடந்த சில வருடங்களாக மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.