நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று வாதாடினார். விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் 30 நாட்கள் பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி பரோல் கோரி மனு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நளினி நேரில் ஆஜராவதில் சிக்கல் உள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை எவ்வாறு தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என்று எப்படி கூற முடியும் என்றனர். இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி வாதிட நளினி தயாரா என்று அவரிடம் கேட்டு சொல்லுமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நளினி நேரில் ஆஜராகி வாதிட அனுமதி
இந்த நிலையில் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையில், நளினி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக விரும்பவில்லை. நேரில் ஆஜராகவே விரும்புவதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து நீதிபதிகள் நளினியை எப்போது ஆஜர்படுத்தலாம் என அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு, நளினியை நேரில் ஆஜர்படுத்த டிஎஸ்பி தலைமையில் 50 போலீசார் வரை பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதால் ஒருவாரம் அவகாசம் தேவை என கேட்டனர். அதையேற்ற நீதிபதிகள், விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கண்ணீர் மல்க நளினி வாதம்
இந்நிலையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் வேலூர் சிறையில் உள்ள நளினி நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது வாதாடிய நளினி,'நேரில் வாதாட வாய்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கோடி நன்றி' என்றார். ராஜீவ் கொலையில் எந்த குற்றமும் செய்யாமல் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் 'எனது மகளை சீராட்டி பாராட்டி வளர்க்கவில்லை; அவள் பெரியவர்கள் பாதுகாப்பிலேயே வளர்கிறாள்; எனக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் இந்த நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளேன்;28 ஆண்டுகளாக நானும், எனது கணவரும் சிறையில் உள்ளோம்; எனது குழந்தையும் சிறையில் பிறந்தது; தாயாக மகளுக்கு செய்ய வேண்டிய எந்த செயலையும் செய்ய முடியவில்லை' என்று கண்ணீர் மல்க சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வாதிட்டார். மேலும் மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஒரு மாத பரோல் போதாது, தனக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
6 மாத கால பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து பேசிய அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சிறை விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது, ஒரு மாதம் தான் வழங்க முடியும் என்றும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் தான் பரோல் வழங்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் பரோல் காலத்தில் நளினி தங்க இருக்கும் இடங்களை ஆய்வு செய்ய அவகாசாம் வேண்டும் என்றும் சிறைவிடுப்புக்கு உத்தரவாத கையொப்பம் இடுபவரின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நளினிக்கு ஒரு மாதம் பரோல்
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராஜிவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாதம் பரோல் நளினி கோரியிருந்த நிலையில், 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என்று நளினிக்கு ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
அதைத் தொடர்ந்து பரோலில் விடுவிக்க நளினி உத்தரவாதம் தர வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனையிட்டனர். மேலும் 10 நாட்களில் காவல்துறை, நளினியின் முகவரி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நளினிக்கு பிறப்பித்த நிபந்தனைகள்
*பரோல் காலத்தில் நளினி ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் தரக்கூடாது.
*பரோல் காலத்தில் நளினி அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது.
*பரோல் நிபந்தனைகளை மீறினால் நளினியின் பரோல் ரத்து செய்யப்படும்.
*ஒரு வார காலத்துக்குள் தங்குமிடம், உறவினர், நண்பர்கள் பற்றிய விவரங்களை போலீசிடம் வழங்க வேண்டும்.
*நளினி தரும் விவரங்களை சரிபார்த்து 10 நாட்களுக்குள் பரோல் தேதியை முடிவு செய்ய சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது