திறமையான நிர்வாகத்தை நடத்திய பிரபாகரன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது - விக்கி
05 Jul,2019
போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது அவர் அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள், சாட்சியங்கள் உண்டு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
. அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்பில் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் போதை பொருள் தடுப்பு சம்மந்தமாக ஒரு கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன்.
அப்போது அந்த திணைக்களத்தின் தலைவர் கலாநிதி சமரக்கோன் என நினைக்கிறன் இலங்கையில் போதைப் பொருள் விடயங்களை கையாள்கின்ற விடயங்களை நன்கு தெரிந்த ஒருவர் அவர் குறிப்பிடும் போது சொன்னார் 2009 மே மாதம் வரை இலங்கையின் வடக்கு பகுதியில் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு போதை பொருளும் காணப்படவில்லை, பயன்படுத்தியதாக இல்லை, போதைப்பொருள் விநியோகமும் இருந்ததில்லை. ஆதாவது போதைப் பொருளே இருந்ததில்லை என்றார்.
எனவே 2009 மே மாத்திற்கு பின்னரே வடக்கில் போதைப் பொருள் பாவனையும், விநியோகமும் காணப்படுகிறது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது நான் அவரிடம் இராணுவம், கடற்படை,விமானப்படை, பொலீஸ் என அதிகளவான முப்படையினர் உள்ள ஒரு இடத்தில் எவ்வாறு போதைப்பொருள் வருகிறது புலிகளின் காலத்தில் இல்லாதது இப்போது வருகிறது என்றால் வேலியே பயிரை மேய்கிறதா என்றொரு கேள்வியை கேட்டிருந்தேன்.
நான் ஏன் இதனை குறிப்பிடுகின்றேன். என்றால் 2009 க்கு முன் வடக்கில் எந்தவொரு போதைப் பொருளும் இல்லை என்றால் அந்தளவுக்கு திறமான நிர்வாகத்தை நடத்தியிருந்த பிரகாகரனை இவ்வாறு ஜனாதிபதி கேவலமான முறையில் சித்தரிப்பது கவலையினையும் மனவருதத்தையும் தருகிறது.
பிரபகரன் போதைப்பொருள் கடத்தினார் விற்பனை செய்தார் என்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருக்கிறதா? எங்காவது விடுதலைப்புலிகள் போதைப்பொருளுடன் பிடிப்பட்டு வழக்குகள் ஏதாவது நடந்திருக்கிறதா? எதுவும் இல்லாது எடுத்த எடுப்பில் தான் நினைத்தமாதிரி ஆதாரம் இல்லாத ஒரு கருத்தை ஜனாதிபதி கூறியது தவறு என்றே கூறுவேன். என்றார்