ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை
01 Jul,2019
ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை
ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.
இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.
தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.
அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.