அவசரகால சட்டத்தைக் கொண்டு வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த அரசாங்கம் முயற்சி : ஸ்ரீதரன்
28 Jun,2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து அவசர கால சட்டடத்தை சாட்டாக வைத்துக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டத்தை நீடிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கால சட்டத்தினால் அதிகமாக தமிழ் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவசர கால சட்டத்தை கொண்டு வடக்கு, கிழக்கில் அதிகமான இராணுவ அடைக்குமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு வடக்கு, கிழக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை உள்ளமையே இதன்மூலமாக தெரிகின்றது.
இன்று நாட்டில் ஏனைய பகுதி களில் நிலைமை ஒரு வகையில் இருக்கையில் மதவாச்சியைத் தாண்டியவுடன் வடக்கில் நிலைமைகள் படு மோசமாகவே உள்ளன. அங்கு இன்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள் நிலவுகின்றன.
வடக்கில் பாடசாலைகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு இடம்பெறாத பகுதியில் இவ்வாறு இராணுவத்தை குவித்து தேடுதல் நடவடிக்கைகள் நடத்துவதில் என்ன நியாயம் உள்ளது? இதன் மூலமாக அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.
தமிழர்களை அச்சத்தில் வைத்திருக்கவா இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுகின்றது. முதலில் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். இன்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர். இவர்களின் தேவை என்ன?
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு தமிழர்களையும் முஸ்லிம்களையும் அடிபணிய வைக்கும் சிங்களப் பேரினவாத அரசியலைக் கையாள ஒரு சிலர் முயற்சிகளை எடுக்கின்றனரா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது. ஏனெனில் இன்று சிங்களப் பிரதேசங்களில் நிலைமைகள் சுமுகமாக உள்ளன.
ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அவசரகால சட்டம் வடக்கு, கிழக்கிற்கு ஒரு விதத்திலும் தெற்கிற்கு வேறு விதத்திலும் செயற்பட முடியாது. ஆகவே இந்த அவசர கால சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம். இன்று வாக்கெடுப்பிலும் நாம் இதனை எதிர்த்தே வாக்களிப்போம். ஏனெனில் அவசரகால சட்டத்தை சாட்டாக வைத்து வடக்கையும் கிழக்கையும் இராணுவ ஆட்சியில் வைத்துக்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. நீராவிப் பிள்ளையார் அகற்றப்பட்டு இன்று ரஜ விகாரை அமைக்கப்படுகின்றது. பிள்ளையார் கோவிலை பெற்றுக்கொடுக்க அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருப்பாரா? நயினாதீவில் பாரிய பெளத்த விகாரை அமைக்கப்படுகின்றது.
நாவற்குழி பிரதேசம் முற்றுமுழுதாக தமிழர்கள் வாழும் பகுதி. அங்கு சிங்கள விகாரைகள் ஏன் அமைக்கப்படுகின்றன? தமிழ் இனத்தை முழுமையாக சுத்திகரிப்பு செய்து தமிழர்களை அழிக்கவே சிங்களப் பேரினவாத சக்திகள் அன்று தொடக்கம் இன்றுவரை செயற்பட்டு வருகின்றன .
இவ்வாறான நிலையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து வாழக்கூடிய சூழல் ஒருபோதும் உருவாக்கப்படாது. தமிழர்கள் விடயத்தில் தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை காணாமல் போனோர் விவகாரம் அப்படியே உள்ளது. ஆகவே இந்த விடயங்களில் தீர்வுகள் வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகள் தலையிட்டு எமது விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்