15 வருட சிறையில் இருந்து பலியானவரின் சம்பவத்தின் பின்னணி!! :மனதை உருக்கும் மனைவியின் கண்ணீர் கதை !!
26 Jun,2019
எனது கணவருக்கும் லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
செய்யாத தவறுக்கு சிறையில் இருப்பதை நினைத்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது என தெரிவித்த, உயிரிழந்த அரசியல் கைதியான சகாதேவனின் மனைவி, விடுதலையாகுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தவர் இன்று விடுதலையாகாமலே எம்மை விட்டு சென்றுவிட்டார் என கதறுகிறார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறைவைக்கப்பட்டிருந்த முத்தையா சகாதேவனின் மனைவி மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள். 1983 கலவரத்துக்குப் பின்னர்தான் கொழும்புக்கு வந்தோம்.
அப்படியே இங்கேயே இருந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை சந்தோசமாகத்தான் இருந்தது.
என்ன நடந்ததோ தெரியாது, எந்தக் குற்றமும் செய்யாத எனது கணவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.வீடு, தோட்டங்களைத் துப்பரவு செய்வதற்காக எனது கணவரை அழைப்பார்கள். அவ்வாறானதொரு வேலைக்குத்தான் அன்றும் அவர் சென்றிருந்தார்.
வீட்டு உரிமையாளர் பணித்த தோட்ட வேலையை செய்திருக்கிறார். தோட்டத்தைச் சுத்தம் செய்ததோடு மதில் சுவரோடு இருந்த மரக்கிளைகளையும் வெட்டியுள்ளார்.
அதுவே கைதுக்குக் காரணமாக அமையும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
அவர் துப்பரவு செய்த தோட்டத்தின் அடுத்த வீட்டில்தான் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்திருக்கிறார்.
அங்குவைத்துதான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கொலைசெய்யப்பட்டதோடு எனது கணவருக்கு தொடர்புள்ளது என கூறி 2005ஆம் ஆண்டு எனது கணவரைக் கைதுசெய்தார்கள். 2008ஆம் ஆண்டுதான் வழக்குப் பதிவுசெய்தார்கள்.
இன்றுவரை வழக்குக்குப் போய் வருகிறேன். எதிர்வரும் 27ஆம் திகதியும் வழக்கு இருக்கிறது.
இருந்த நகைகளை விற்று, கடன்வாங்கித்தான் வழக்குக்குப் போய் வந்தேன். எப்படியும் நான் வெளியில் வந்துவிடுவேன் என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இன்னுமொருவர் 6 மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.
எல்லோரும் விடுதலை செய்யப்படுகிறார்கள், எந்த குற்றமும் செய்யாத என்னை மட்டும் ஏன் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று மனமுடைந்து காணப்பட்டார்.