மாமா வேலை வேண்டாம்” : கூட்டமைப்பை கோருகிறார் சி.வி
23 Jun,2019
கல்முனை பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து கால அவகாசத்தை வழங்கப் பார்க்கின்றது.
அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
அத்துடன் உண்ணாவிரதிகளின் கோரிக்கைக்கு ஆத்மார்த்தமான ஆதரவை வழங்குவதோடு கல்முனை கள நிலைமைகளை நேரில் அறிவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் செல்லவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கனடா ‘வாணிபம்’ வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் ‘அன்பகம் ‘ மூதாளர் மாதாந்த உதவித்திட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்களின் உடைமைகளை உறவுகளை அழித்து அகதிகளாக்கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது.
பயங்கரவாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்களைப் பயங்கரமாகப் பதம் பார்த்தது அரசாங்கமே.
நாம் கேட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கங்கள் தந்திருந்தால் மக்கள் கிளர்ந்தெழத் தேவை எழுந்திருக்காது அரச பயங்கரவாதம் எம் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது.
இவைபற்றியெல்லாம் அரசுடனும் சர்வதேசத்துடனும் பலவழிகளில் பேசிப் பார்த்தாயிற்று.
எமது அனைத்து முயற்சிகளும் ஏதோ வகைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக நாங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி ஆரம்பித்திருந்தோம்.
சுமார் ஒரு கிலோமீற்றர் நடந்துபோனபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டோம்.
அங்கிருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டுவெடிப்பு அன்று காலை நடந்தது பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டோம்.
நடைபவனியை அன்று கைவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று வரையில் தொடர்பில் இருந்து வருகின்றோம்.
உண்ணாவிரதிகளைக் கண்டு எமது ஆத்மார்த்த ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றோம்.
ஆனால் நேற்றைய(நேற்று முன்தினம்) சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. அரசாங்கம் காலம் கடத்தினால் உண்ணாவிரதிகளின் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும்.
தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவதாக அறிவித்;து உண்ணாவிரதிகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.
அவர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களைக் காப்பாற்றாது விட்டால் நிலைமை மிக மோசமாகி விடும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அடிபட்டு சாகக்கூடிய நிலைமை உருவாகக்கூடும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் இதிலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது.
அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நிலைமையை அறிய பிரதமர் உடனே குறித்த இடத்திற்குப் போனால் நல்லது என்றார்.