ஒன்று மலைப்பாம்பு என்றால், மற்றையது விஷப்பாம்பு – விக்னேஸ்வரன்
20 Jun,2019
பெரும்பான்மை கட்சிகளில் ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர்களில் எந்த பெரும்பான்மை கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கும் அவர்களின் திட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகின்றது என்றும் கூறினார். மகாவலி திட்டம் தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு பதிலைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எமது தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கும் அவர்களின் திட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான கட்சிகளுமே, தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளில் ஏட்டிக்குப் போட்டியாகவே செயற்பட்டு வந்திருக்கிறமை வரலாறு.
ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என்பதே யதார்த்தம். ஒன்று விழுங்கும். மற்றையது நின்று கொல்லும். கடந்த 5 வருடங்களில் நல்லாட்சி என்ற முகமூடி அணிந்த இந்த இரண்டு பாம்புகளும் ஒன்று சேர்ந்த ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் ஒரு சில இடங்களில் இராணுவத்தை பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேற்றிவிட்டு ஆயிரக்கணக்காண எமது காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன.
கடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத் திட்டங்களும் முனைப்படைந்து வந்திருக்கின்றன.
அதேவேளை, வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புக்களுக்கும் துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளன.
பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் இராணுவம் வியாபாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
கடல் பிரதேசங்களில் கடற்படையினரின் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மீனவர்களின் மீனவ வாழ்க்கை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றது.
இனியாவது சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து மகாவெலித் திட்டம் எமக்கு வேண்டாம் என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.” என கூறினார்.