பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க பணம் கிடைக்காமையால் விரக்தியில் மகள் தற்கொலை செய்திருக்கலாம் தாய் வாக்குமூலம்
18 Jun,2019
‘ இரு பிள்ளைகளுக்கும் கற்க பாடசாலை ஒன்று கிடைக்காமை தொடர்பில் மகள் விரக்தியிலேயே இருந்தார்.
பல பாடசாலைகளில் விசாரித்தும், அவற்றில் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள நிறைய பணம் கோரியுள்ளனர்.
அதனால் விரக்தியில் மகள் பிள்ளைகளுடன் இந்த அழிவைத் தேடிக்கொண்டிருக்கலாம்’ என கொள்ளுப்பிட்டியில் கடந்த வெள்ளியன்று இரு மகன்மாருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்னின் தாயாரான 65 வயதான செல்லையா ரீட்டா சரோஸ் மரண விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியுள்ளார்
கடந்த வெள்ளியன்று மாலை கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரையோர வீதியில் சன் ஹில் ஹோட்டலுக்கு அருகாமையில், கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தனது இரு மகன்மாருடன் தற்கொலை செய்து கொன்டிருந்தார்.
32 வயதான கொட்டாஞ்சேனை, பரமாநந்தன் மாவத்தையைச் சேர்ந்த ஜெனட் தர்ஷனி ராமையா என்பவர் தனது 8 வயது மகனான கிரிசேலி பிரேமநாத் ஆசிரியன் ஜோயல் மற்றும் 5 வயதன கிரிசேலி பிரேமநாத் டியோன் கிரிஸ் ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர்களது மரணம் தொடர்பில் கொழும்பு நகர திடீர் மரண விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே 65 வயதான செல்லையா ரீட்டா சரோஸ் வாக்குமூலமளித்துள்ளார்.
இவர்களது மரண விசாரணையின்போதே தர்சினியின் தாயாரான செல்லையா ரீட்டா மேற்படி கூறியுள்ளார்.
கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரியான இரேஷா தேஷானி முன்னிலையில் நடந்த இந்த மரண விசாரணையின்போது வாக்குமூலமளித்த ரீட்டா, தனது மூத்த மகளான பரமானந்த மாவத்தையைச் சேர்ந்த 32 வயதுடைய ஜெனட் தர்சினி ராமையாவும், அவரது இரண்டு பிள்ளைகளான பிரேம்நாத் நோயல் (வயது 8), பிரேம் நாத் டியோன் க்ரிஷ் (வயது5) ஆகியோரே மரணமடைந்ததாக உறுதிப்படுத்தினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
“எனது மகள் தனது மூத்த பிள்ளையான நோயல் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது அவரது கணவருடன் வெளிநாடு சென்றிருந்தார்.
அங்கு வீசா பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தனது பிள்ளைகளுடன் வீடு திரும்பவேண்டியநிலை ஏற்பட்டு மீண்டும் இங்கு வந்து தங்கினார்.
பின்னர் பிள்ளைகளுக்கு பாடசாலை தேடியும் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் ஆங்கிலம் கற்றதனால் சாதாரண பாடசாலைகளில் சேர்க்கமுடியவில்லை.
அதனால் சர்வதேச பாடசாலைகளிலும் முயற்சித்தோம், முடியவில்லை. ஏனெனில் அங்கு பெருமளவு பணம் கேட்டார்கள்.
மகள் கவலையில் இருந்தாள். நான் பணம் தருவதாக கூறினேன். இதன்படி கடந்த 13ஆம் திகதி நாங்கள் பாடசாலை ஒன்றுக்கு சென்றோம். அங்கு பணம் கேட்டார்கள். அவ்வளவு பணம் எம்மிடம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.
மறுநாள் காலையில், “அம்மா நாங்கள் தேவாலயம் சென்றுவிட்டு வருகிறோம். இனி உங்களுக்கு தொல்லையாக இருக்கமாட்டோம்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
எனது பேரன்மார் மிகவும் கீழ்ப்படிவான பிள்ளைகள். அவர்களுக்கு பாடசாலை கிடைக்கவில்லை என்ற கவலையிலேயே மகள் இப்படி செய்திருக்கிறாள்” என்று ரீட்டா கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்