நளினியை முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்!: நீதிமன்றம் கேள்வி
12 Jun,2019
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனிலுள்ள தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமனறத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது, நேரில் முன்னிலையாகி வாதிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரியிருந்தார்.
குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரசு தரப்பு சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி, “மகளின் திருமண ஏற்பாடு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை நளினி தாக்கல் செய்யவில்லை” என வாதிட்டார்.
ஆனால், அவரது வாதத்தினை ஏற்க மறுத்த நீதிபதிகள், நளினியை நேரில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல்கள் காணப்படுகின்றதென கேள்வி எழுப்பினர்.
மேலும், நளினிக்கு நேரில் வாதிடுவதற்கு உரிமை உள்ளது. ஆகையால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கி அதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க முடியுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆகையால் இவ்விடயத்தில் உரிய பதிலை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கூறி எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது