படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுட்டிப்பு!
11 Jun,2019
யாழ் குடாநாட்டின் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 31 அப்பாவி தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ஸ்ரீலங்கா கடற்படையினர் அணுகிய போது தாம் பொதுமக்கள் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் கைகளை உயர்த்தினர்.
எனினும் மீனவர்களை தாக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா கடற்படையினர், கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் சித்திரவதை செய்து கொலை செய்திருந்தனர்.
இந்த தாக்குதலில் குருநகரைச் சேர்ந்த 30 மீனவர்களும் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததுடன், ஒரே ஒரு மீனவர் மாத்திரம் உயிர் தப்பியிருந்தார்.
ஸ்ரீலங்கா கடற்படையினரின் கொடூரமான தாக்குதலில் பலியான இந்த 31 மீனவர்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று குருநகரில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கான சுடர் ஏற்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோலட் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.