மைத்திரி – ரணில் கோரிக்கை: பயண எச்சரிக்கையை தளர்த்தியது சுவிட்சர்லாந்து
28 May,2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணிலின் கோரிக்கையினை அடுத்து இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கை தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிவிவகார திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்திருந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் இலங்கைக்கு செல்வது குறித்து தமது நாட்டுப் மக்களிற்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் தற்போது இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம், இலங்கையில் இருக்கும்போது பயணிகள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் போது இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.