கண்ணீர் மயமானது முள்ளிவாய்க்கால்! தாயகம் எங்கும் சோக மயம்
18 May,2019
தமிழின அழிப்பின் முள்ளிவாக்கால் பேரிடரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை உணர்வுபூர்வமாக ஆரம்மானது.
இன்று காலை ஒரு நிமிட அக வணக்கத்துடன் முள்ளிவாக்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஆரம்பமானது .
முதன்மைச்சுடரை முள்ளிவாக்காலில் நடந்த இனஅழிப்பின் சாட்சியான ஒருகையை இழந்த சிறுமியொருவர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல்களுக்கு வந்தவர்கள் சுடர்களை ஏற்றி தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு கதறியழுகின்ற காட்சிகள் அனைவரது மனங்களையும் கரைய வைத்தது.
வெளிநாட்டவர்களும் இங்கு சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதகுருமார் மலர் தூவி அஞ்சலி செய்தனர்
இதன்போது மே18 பிரகடனம் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது.
இறுதியில் நினைவேந்தலில் கலந்து கொண்ட அனைவரும் வரிசையில் நின்று பிரதான நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இராணுவ கெடுபிடி மற்றும் கடும் சோதணைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், அரசியல்வாதிகள், மதகுருமார்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழன அழிப்பு நடைபெற்று இன்று பத்தாண்டுகள் கடந்துள்ள போதும், தாயகத்தில் எம் உறவுகளின் கண்ணீர் இன்னும் காயவில்லை என்பதை இன்றைய தினம் உறுதிப்படுத்தியது.