மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக நினைவுகொள்ளத் தீர்மானம்!
11 May,2019
தமிழின படுகொலை வாரமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவாரத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலத்தில் வடகிழக்கு மாகாணத்தின் 21 இடங்களில் இடம்பெற உள்ளதாகவும் இறுதி நாளான மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு நினைவேந்தல் நிகழ்விற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை வருடா வருடம் அனுஷ்டித்து வருகிறோம். வடக்கு மாகாண சபையினூடாக செய்யப்பட்டு வந்த இந்நிகழ்வுகளை இம்முறை அப்பகுதி மதத் தலைவர்கள் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஆகவே பொதுவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு அனைவரும் ஆதரவை வழங்கி ஒற்றுமையாக அணிதிரள வேண்டும். ஆனாலும் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கும் அந்த நிகழ்வுகளை நடத்துவதற்கும் பல வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து அவசரகாலச்சட்ட சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்கள் மீது கடுமையாக பிரயோகிக்கப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளை நடத்தக்கூடாது மக்கள் அணிதிரளக்கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மக்களை அச்சமூட்டுகின்ற செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் அரசின் அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளுக்கு அடிபணியாமல் தடைகளைத் தாண்டி இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.