இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை – உண்மை என்ன?
                  
                     05 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	
	 
	
	இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
	தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையை சேர்ந்த க.செந்தமிழ் என்ற பெயரில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
	இந்த பயங்கரவாத சூழலை முறியடிக்க முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை இராணுவம் நாடியிருப்பதானது, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
	தமிழர்களை அழித்ததை போன்று முஸ்லிம்களையும் அழித்து இலங்கையை பௌத்த நாடாக மாற்றுவதற்கான சதி முயற்சி இதுவெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
	அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் 33 வருட கால யுத்தத்தில், இவ்வாறான படுகொலை தாக்குதலை நடத்தியிருக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
	தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிசிறந்த உலக புலனாய்வுக் கட்டமைப்பு தொடர்பில் இலங்கைக்கு மாத்திரமன்றி, சர்வதேசத்திற்கும் அது தெரியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	விடுதலை புலிகள்
	இந்த அறிக்கை தொடர்பில் பிபிசி தமிழ், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளிடம் வினவியது.
	“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் க.செந்தமிழ் என்ற எவரும் இருக்கவில்லை” என்கிறார் முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி.
	ராணுவம்
	இதனை இலங்கை ராணுவமும் உறுதிபடுத்துகிறது.
	ராணுவ ஊடக பிரிவு, “இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இது மாதிரியான போலி செய்திகளை சிலர் பரப்புகின்றனர். இதனை யாரும் நம்பவேண்டாம்” என்கிறது.
	இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையை பயன்படுத்தி, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
	இவ்வாறான அறிக்கைகளை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.