இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடா செல்ல அனுமதியா?
30 Apr,2019
இலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு போலிச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இலங்கையில் போலிச் செய்திகளின் பரவலை தடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரை அந்நாடு முழுவதும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "இலங்கையர்கள் விசா இல்லாமல் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு" மற்றும் "இலங்கையர்கள் விசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி; ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி" என்ற தலைப்புகளுடன் கூடிய செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
"கனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்" என்றும், "கனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது" என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாகவும் அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கனடாவிற்கு வரும் இலங்கையர்களுக்கு அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்காணும் செய்திகள் தமிழ் மொழிலேயே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதே போன்றதொரு செய்தியை ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாக பரவி வரும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தமிழ் ஆராய்ந்தபோது, இது போலியானது என்று தெரியவந்துள்ளது.