இலங்கையில் முகத்தை முழுமையாக மூடும் ஆடை அணிய தடை
29 Apr,2019
ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகங்களை முழுமையாக மூடி, ஆடை அணிவதை தடை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
முகத்தை மூடி ஆடை அணிவது இன்று (திங்கள்கிழமை) முதல் தடை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இலங்கையின் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேலும் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பிறகு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்புகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.