வவுனியாவில் சுற்றிவளைப்பு தேடுதல்
25 Apr,2019
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் காவல்துறையினரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே அதிகளவான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மத ஸ்தலங்கள் என்பற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிலையிலேயே இன்று வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை இராணுவத்தினரும் காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.