"சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்தேன்" - உயிர்தப்பியவரின் அனுபவம்
22 Apr,2019
கிரென் அரசரத்னம்
இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் கொழும்புவிலுள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியும் ஒன்று. குண்டு வெடித்த சமயத்தில் விடுதியின் 18ஆவது மாடியில் இருந்த தான் இடி விழுந்ததை போன்ற சத்தத்தை கேட்டு கீழே ஓடி வந்ததாக கூறுகிறார் லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரியும் கிரென் அரசரத்னம்.
தற்போது 41 வயதாகும் அரசரத்னம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனுக்கு அகதியாக குடிபெயர்ந்தவர்.
"எல்லோரும் கடும் பீதியில் உறைந்தார்கள். விடுதியின் ஒரு பகுதி முழுவதும் இரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று தெரியாமல் அனைவரும் பதற்றத்தில் ஓடியபடி இருந்தனர்" என்று அரசரத்னம் கூறுகிறார்.
"நான் காலை உணவை சாப்பிட செல்வதற்கு சிறிது நேரம் தாமதித்து இருக்காவிட்டால், நானும் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்திருப்பேன்."
"சாப்பிட செல்வதற்கு முன்னர் ஏதோ நெருடலான உணர்வு இருந்ததால், மீண்டும் என்னுடைய அறைக்கு சென்று டெபிட் கார்டை எடுப்பதற்குள் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதியாக பிரிட்டன் சென்றேன். ஆனால், இப்படியொரு சம்பவத்தை மீண்டுமொருமுறை பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 8.30 மணி முதல் 9.15 மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெஹிவலாவிலும், கொழும்புவின் தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறிய போது அங்கிருந்தவர்கள் பிபிசியிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலான நிகழ்வுகள், தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் குடும்பத்தினருடன் வசித்து வரும் 48 வயதான மருத்துவர் இம்மானுவேல் இலங்கையை பூர்விகமாக கொண்டவர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் சென்ற வாரம் இலங்கை வந்திருந்த அவர், கொழும்புவிலுள்ள சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.
படத்தின் காப்புரிமை
ISHARA S. KODIKARA
"சுமார் 8:30 மணியளவில் விடுதியின் அறையில் இருந்தபோது பெரும் சத்ததுடன் அதிர்வு ஏற்பட்டது. அதன் பிறகு உடனடியாக விடுதியின் வாடிக்கையாளர் மையத்திற்கு சென்றபோது, எங்களை உடனடியாக விடுதியின் பின்புறம் வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். அந்த சமயத்தில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்தனர்" என்று இம்மானுவேல் பிபிசியிடம் கூறினார்.
விடுதியின் ஊழியர் ஒருவர், தான் குண்டுவெடிப்பில் கால் சிதறி உயிரிழந்த ஒருவரின் உடலை பார்த்ததாக கூறிய சமயத்தில், தன்னுடைய நண்பரொருவர் இலங்கையின் வெவ்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு புகைப்படங்களை அனுப்பியதாக அவர் மேலும் கூறினார்.
"என்னுடைய வாழ்க்கையின் முதல் 18 ஆண்டுகளை இலங்கையில் கழித்தபோது, பல்வேறு விதமான இன கலவரங்களை கண்டுள்ளேன். ஆனால், இதுவரை போர், வன்முறை உள்ளிட்டவற்றை கண்டிராத எனது குழந்தைகளுக்கும், மனைவிக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று இம்மானுவேல் கூறுகிறார்.
"இலங்கையை விட்டு வன்முறை முற்றிலும் சென்றுவிட்டதாக நினைத்த நிலையில், நடைபெற்றுள்ள இந்த சம்பவம் என்னை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது."