மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்
17 Apr,2019
மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்லுமாறு கேட்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் வாழ வேண்டும். படையினரின் வசதிக்காக அவர்களை வெளியிடங்களுக்கு மாற்றவே முடியாது என்றும் இதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் மக்களின் பல காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் நீண்டகாலமாக ஜனநாயக வழியில் போராடி வருகின்றனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வடக்கு – கிழக்கில் சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்த இரா சம்பந்தன், எனவே, மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.