தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகம் அனுமதி மறுப்பு
03 Apr,2019
இன்று மாலை கொழும்பு தமிழ்μச் சங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையினால் நடத்தப்படவிருந்த தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் கட்சிகளுக்கு சங்கத்தில் கூட்டங்களை நடத்த இடமளிப்பதில்லை என்பதால் இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கபப்ட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
முன்னதாக இந்த நிகழ்வு குறித்து சொல்லப்பட்டபோது அரசியல் பேச்சுக்கள் எவையும் நடைபெறாதெனக் கூறப்பட்டாலும் நிகழ்வின் அழைப்பிதழில் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளே பேச்சாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை அறியப்பட்டதால் சங்கரப்பிள்ளை மண்டபத்தை இந்த நிகழ்வுக்கு வழங்குவதில்லையென நேற்று முன்தினம் கூடிய தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு தீர்மானித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை தந்தை செல்வாவுக்கான கெளரவத்தை வழங்குவதில் கொழும்பு தமிழ்ச் சங்கம் உறுதியாக இருக்கின்றபோதிலும் தமிழ்ச் சங்கத்தை அரசியல் மேடையாகப் பாவிக்க இடமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கான அனுமதி மறுப்புக் கடிதத்தை கொழும்பு தமிழ்ச் சங்கம் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைக்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் வடக்குகிழக்குக்கு வெளியே கால் பதிக்கவுள்ளதாக மாவை சேனாதிராசா எம்.பி. தெரிவித்த சில தினங்களில் கொழும்பில் அவர்களின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது